பாதுகாப்பான குடிநீர் விநியோகம் செய்யாவிட்டால் நடவடிக்கை
தூத்துக்குடியில் குடிநீர் விநியோகம் செய்யும் தனியார் நிறுவனத்தினர் முறையாக குளோரினேசன் செய்து பாதுகாப்பான குடிநீரினை விநியோகம் செய்யாவிட்டால் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி வெளியிட்ட செய்திக்குறிப்பில், "தூத்துக்குடி மாவட்டத்தில் மழை மற்றும் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட இடங்களில் தொற்றுநோய் பரவாமல் தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற தமிழ்நாடு முதலமைச்சர் ஆய்வு மற்றும் ஆலோசனை அடிப்படையில் தூத்துக்குடி மாவட்டத்தில் தொடர் மழையால் ஏற்பட்ட தொற்று நோய்களை கட்டுப்படுத்துவதிலும் சுகாதாரத் துறை மூலம் சிறப்பு மருத்துவக் குழுக்கள் மூலம் சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.
மழை வெள்ளத்தால் தாமிரபரணி ஆற்றுபடுகைகளில் உள்ள உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம், நீரேற்று நிலையங்கள் முறப்பநாடு, பொன்னங்குறிச்சி, மங்கலக்குறிச்சி, ஏரல், ஆத்தூர் ஆகிய பகுதிகளில் மிகுந்த சேதம் அடைந்த சூழலில் தூத்துக்குடி மாவட்ட பகுதிகளில் பாதுகாப்பான குடிநீர் விநியோகம் செய்வதை உறுதி செய்திட மாநகரட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் கிராம ஊராட்சி பகுதிகளில் சிறப்பு கண்காணிப்பு குழுக்கள் ஏற்படுத்தப்பட்டு தனியார் குடிநீர் ஏற்று நிலையங்கள் உட்பட சுகாதார ஆய்வாளர்கள் அடங்கிய குழுவினர் நீரேற்று நிலைய குழுவினருக்கு தமிழ்நாடு பொது சுகாதார சட்டம் 1939-ன் படி 20 நோட்டிஸ்கள் வழங்கி லாரிகள் மூலம் விநியோகிக்கப்படும் குடிநீரையும் குளோரினேசன் செய்து முறையாக பாதுகாப்பாக பொது மக்களுக்கு வழங்கி வருகின்றனர்.
மேலும் வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வீடுகள் தோறும் குளோரின் மாத்திரை விநியோகம் செய்யப்பட்டு பாதுகாப்பான குடிநீர் வழங்கல் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தண்ணீரினால் பரவக் கூடிய வயிற்றுப்போக்கு, காலரா, டைபாய்டு, மஞ்சள்காமாலை, எலிக்காய்ச்சல் போன்ற நோய்கள் வராமல் தடுக்கப்பட்டுள்ளது. உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம், நீரேற்று நிலையங்கள் பழுது நீக்கம் செய்யப்பட்டு படிப்படியாக குடிநீர் வழங்கும் நிகழ்வு நடைபெற்று வருகிறது.
பொது மக்கள் தங்கள் பகுதிகளில் சுகாதார குழுக்கள் மூலம் வீடுவீடாக விநியோகம் செய்யப்படும் குளோரின் மாத்திரைகளை 20 லிட்டர் தண்ணீருக்கு 1 மாத்திரை வீதம் குடிநீர் குடங்களில் பயன்படுத்தி பாதுகாப்பான குடிநீரை உறுதி செய்து மழைகால நோய்கள் வராமல் பொதுமக்கள் பயன் அடையும்படியும் தனியார் நீரேற்று நிலையங்கள், லாரிகள், டிராக்டர்கள், சின்டக்ஸ் மூலம் குடிநீர் விநியோகம் செய்யும் தனியார் நிறுவனத்தினர் முறையாக குளோரினேசன் செய்து பாதுகாப்பான குடிநீரினையே விநியோகம் செய்ய வேண்டும். தவறும் பட்சத்தில் தமிழ்நாடு பொது சுகாதார சட்டம் 1939 விதிகளின் படியும் உள்ளாட்சி அமைப்பு விதிகளின் படியும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்துள்ளார்.