தமிழில் பெயர்ப் பலகை வைக்காத 66 நிறுவனங்கள் மீது நடவடிக்கை
தஞ்சாவூர் மாவட்டத்தில், தமிழில் பெயர்ப் பலகை வைக்காத மற்றும் பணியாளர்களுக்கு இருக்கை வசதிகள் ஏற்படுத்தித் தராத, 66 நிறுவனங்கள் மீது தொழிலாளர் துறையினர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
Update: 2024-02-14 13:11 GMT
தஞ்சாவூர், பட்டுக்கோட்டை, கும்பகோணம், பாபநாசம் ஆகிய பகுதிகளில் தொழிலாளர் துறை அலுவலர்கள் செவ்வாய்க்கிழமை சிறப்பு ஆய்வு மேற்கொண்டனர். இதில் 12 கடைகள், நிறுவனங்களில் இருக்கை வசதி ஏற்படுத்தி தரப்படாததும், 54 கடைகள், உணவு நிறுவனங்களில் தமிழில் பெயர்ப் பலகை வைக்கப்படாததும் கண்டறியப்பட்டது. இந்நிறுவனங்கள் மீது தொழிலாளர் துறையினர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். வணிகர்கள் அனைவரும் தங்களது நிறுவன பெயர்ப் பலகையை முதன்மையாக தமிழ் மொழியிலும், பிறமொழி எழுத்துகளை விட பெரிய அளவிலும் வைக்க அறிவுறுத்தப்பட்டதாக தஞ்சாவூர் தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) தி.கமலா தெரிவித்தார்.