மாமல்லை அரசு பள்ளிக்கு ரூ.1.47 கோடியில் கூடுதல் கட்டடம்.
மாமல்லை அரசு பள்ளிக்கு ரூ.1.47 கோடியில் கூடுதல் கட்டிடம் கட்டப்பட உள்ளது.
மாமல்லபுரம், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்கு, 1.47 கோடி ரூபாய் மதிப்பில், கூடுதல் வகுப்பறை கட்டடம் கட்ட, பூமி பூஜையுடன் பணிகள் துவக்கப்பட்டது. மாமல்லபுரத்தில், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி இயங்குகிறது. தற்போது, மாணவ - மாணவியர் அதிகரிக்கும் சூழலில், வகுப்பறை கட்டடங்கள் இரண்டு மட்டும் உள்ளன.
பாழடைந்த கட்டடத்தை இடித்ததால், போதிய வகுப்பறை இல்லாமல், மாணவர்கள் அவதிப்பட்டு வந்த நிலையில், கூடுதல் வகுப்பறை கட்டடம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர். இதையடுத்து, கல்பாக்கத்தில் இயங்கி வரும் சென்னை அணுமின் நிலைய நிர்வாகம் பரிசீலித்து, பெரு நிறுவன சமூக பொறுப்பு திட்டத்தில், 1.47 கோடி ரூபாய் மதிப்பில், தரை, முதல், இரண்டாம் ஆகிய தளங்களில், தலா இரண்டு வகுப்பறைகளுடன், கூடுதல் கட்டடம் கட்ட நிதி ஒதுக்கியுள்ளது.
நேற்று முன்தினம் கட்டுமான பணிகள், பூமி பூஜையுடன் துவக்கப்பட்டது.