முன்னாள் அமைச்சர் சி.வி சண்முகம் வழக்கு ஒத்திவைப்பு

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை பற்றி தரக்குறைவாகவும், அவதூறாகவும் பேசியதாக முன்னாள் அமைச்சர் சி.வி சண்முகம் மீது தொடரப்பட்ட வழக்குகளின் விசாரணையை நீதிபதி வேறு தேதிகளுக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

Update: 2024-06-13 08:19 GMT

முன்னாள் அமைச்சர் சி.வி சண்முகம் 

விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகா ஆரோவில் பஸ் நிலையம் எதிரே கடந்த 10.3.2023 அன்றும், கோட்டக்குப்பம் நகராட்சி திடலில் 1.5.2023 அன்றும் அ.தி.மு.க. சார்பில் பொதுக்கூட்டங்களும், விழுப்புரம் பழைய பஸ் நிலையம் அருகில் 20.7.2023 அன்று கண்டன ஆர்ப்பாட்டமும், கோலியனூர் கடைவீதியில் 16.9.2023 அன்று பொதுக்கூட்டமும் நடை பெற்றது. இக்கூட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற சி.வி.சண்முகம் எம்.பி., தமிழக அரசையும், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை பற்றியும் தரக்குறைவாகவும், அவதூறாகவும் பேசிய தாக கூறப்படுகிறது

. இதுதொடர்பாக சி.வி.சண்முகம் எம்.பி. மீது விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அரசு வக்கீல் சுப்பிரமணி யம், தனித்தனியாக வழக்கு தொடர்ந்தார்.இந்த 4 வழக்குகளும் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது சி.வி.சண்முகம் எம்.பி. ஆஜராக வில்லை. அவர் சார்பில் அ.தி.மு.க. வக்கீல்கள் ராதிகா செந்தில், தமிழரசன் ஆகியோர் ஆஜராகி சி.வி.சண்முகம் எம்.பி. ஆஜர் ஆகாததற்கான காரணம் குறித்து மனுதாக்கல் செய்தனர். அப்போது ஆரோவில், கோட்டக்குப்பம் வழக்கு களை விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டு இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில் அந்த தடை உத்தரவு தொடருவதாகவும், விழுப்புரம் பழைய பஸ் நிலையத்தில் பேசியதாக தொடரப் பட்ட அவதூறு வழக்கில் சி.வி.சண்முகம் எம்.பி. நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளித்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளதாகவும், கோலியனூரில் பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் இன்னும் சம்மன் அனுப்பப்படவில்லை என்று கூறியும் மனுதாக்கல் செய்தனர்.

இம்மனுவை ஏற்றுக்கொண்ட மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி பூர்ணிமா, ஆரோவில், கோட்டக் குப்பம், விழுப்புரம் பழைய பஸ் நிலையம் ஆகிய இடங்களில் அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட 3 வழக்குகளின் விசாரணையை அடுத்த மாதம் (ஜூலை) 1-ந் தேதிக்கும், கோலியனூரில் பேசியதாக தொடரப்பட்ட வழக்கின் விசாரணையை வருகிற 24-ம் தேதிக்கும் ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

Tags:    

Similar News