கரூரில், இந்தியில் பேசி வாக்காளர்களிடம் வாக்கு சேகரித்த அதிமுக வேட்பாளர் தங்கவேல்
கரூரில், இந்தியில் பேசி வாக்காளர்களிடம் வாக்கு சேகரித்த அதிமுக வேட்பாளர் தங்கவேல்.
கரூரில் இந்தியில் பேசி வாக்காளர்களிடம் வாக்கு சேகரித்த அதிமுக வேட்பாளர் தங்கவேல். நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில், அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்த பிறகு, வேட்பாளர்கள் தொகுதியில் சென்று பொதுமக்களிடம் வாக்கு சேகரிக்கும் படலம் துவங்கி உள்ளது. இன்றுகரூர் பாராளுமன்ற தொகுதியில் முதன் முதலாக வாக்கு சேகரிக்கும் பணியை துவக்கியது அதிமுக கட்சி. கரூர் பாராளுமன்ற அதிமுக வேட்பாளராக, கட்சியின் கரூர் மாவட்ட எம்ஜிஆர் மன்ற செயலாளராக பணியாற்றி வந்த தங்கவேல் வேட்பாளராக கட்சி அறிவித்தது.
இதன் அடிப்படையில் இன்று கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட கோடங்கிபட்டி பகுதியில் தனது பிரச்சாரத்தை, அதிமுக மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எம் ஆர் விஜய பாஸ்கர் தலைமையில் துவக்கினார் வேட்பாளர் தங்கவேல். தொடர்ந்து, வெங்ககல்பட்டி, காளியப்பனூர், அரசு கலைக்கல்லூரி, ராயனூர், நரிக்கட்டியூர், தொழிற்பேட்டை உள்ளிட்ட 20 இடங்களில் தனது பிரச்சாரத்தை இன்று மேற்கொண்டார். பிரச்சாரத்தை மேற்கொள்ள வந்து வேட்பாளருக்கு அந்தந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பு அளித்தனர். கட்சியினர் பட்டாசுகள் வெடித்தும், மலர் மாலைகள் அணிவித்தும் வேட்பாளரை வரவேற்றனர்.
இதனைத் தொடர்ந்து வேட்பாளரை அறிமுகம் செய்து முன்னாள் அமைச்சர் எம் ஆர் விஜய பாஸ்கர் பேசும்போது, கொடுத்த வாக்குகளை நிறைவேற்றாத கட்சியாக திமுக உள்ளது. தமிழகம் முழுவதும் போதைப் பொருள்களின் நடமாட்டமும், சட்டவிரோத செயல்களும் அதிகரித்து உள்ளது. எனவே திமுகவை தூக்கி எறிந்து விட்டு, பெயரிலேயே தங்கத்தை வைத்துள்ள வேட்பாளர் தங்கவேலுக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டார். இதனைத் தொடர்ந்து பொதுமக்கள் இடையே பேசிய வேட்பாளர் தங்கவேல், வெற்றி பெற்ற பிறகு பாராளுமன்றத்தில் இந்திய அல்லது ஆங்கிலத்தில் பேசி தொகுதிக்கு தேவையான நலத்திட்டங்களை பெற வேண்டும். அப்படி ஒரு நிலை வரும்போது ,கரூர் பாராளுமன்றத்திற்கு தேவையான வளர்ச்சி திட்ட பணிகளை பாராளுமன்றத்தில் ஹிந்தியில் பேசி பெற்று தருவேன் என உறுதி அளிக்கிறேன் என கூறி ஹிந்தியில் பேசி அனைவரையும் கவர்ந்தார். இதனை அங்கு கூடியிருந்த பொதுமக்கள் கேட்டு ரசித்து, கைகளை தட்டி ஆரவாரம் செய்து தங்களது ஆதரவை தெரிவித்தனர்.