ரூ.6 லட்சம் கோடி கடன் சுமை வைத்த அதிமுக - பெரியகருப்பன்
அதிமுக ஆட்சி காலத்தில் ஏற்பட்ட ஒரு குழப்பமான சூழல், ஊழல், நிதி சுமை இவற்றால் 6 லட்சம் கோடி கடன் சுமையோடு பொறுப்பேற்று கொரோனா காலத்திலும் சீர்கெட்டு கிடந்த தமிழக பொருளாதாரத்தை சீர் தூக்கி, பழுதடைந்து கிடந்த அரசு இயந்திரத்தை சீர் செய்து தமிழக முதல்வர் சிறப்பாக ஆட்சி புரிந்து வருகிறார் என பிரசாரத்தின் போது அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்தார்.
சிவகங்கை நாடாளுமன்ற தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் கார்த்திக் சிதம்பரத்தை ஆதரித்து தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் அரளிக்கோட்டை, E.வலையபட்டி, மாம்பட்டி, வடவன்பட்டி, மல்லாகோட்டை, ஜெயங்கொண்டநிலை உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட கிராமங்களில் வாக்கு சேகரித்தார்.
அப்போது அவர் பேசுகையில் நாம் இந்த தேர்தலில் யாருக்கு வாக்களிக்க வேண்டும். யார் தகுதியானவர்கள், எந்த வேட்பாளர்கள் தகுதியானவர்கள் என்பதை எல்லாம் பார்க்க வேண்டும். கடந்த காலங்களில், நிகழ் காலங்களில், அந்த இயக்கங்கள் தமிழ்நாட்டு மக்களுக்கு என்ன சேவை செய்தார்கள் என்பதை எல்லாம் எடை போட்டு சிந்தித்து பார்த்து திமுக தலைமையிலான கூட்டணியை ஆதரிக்க வேண்டும்.
திமுக தமிழக மக்களுக்கு நன்மை செய்யக்கூடிய இயக்கமாகும். திமுக ஆட்சி காலத்தில் பல்வேறு வளர்ச்சி திட்டங்களை தமிழக முதல்வர் ஏற்படுத்தியுள்ளார். 505 வாக்குறுதிகளை மக்களுக்கு அளித்து அதில் 90% வாக்குறுதிகளை நிறைவேற்றி இருப்பதாகவும், சொன்ன வாக்குறுதிகளையும், சொல்லாத வாக்குறுதிகளிலும் முதல்வர் நிறைவேற்றியுள்ளார். கடந்த 10 ஆண்டுகளாக அதிமுக ஆட்சி காலத்தில் ஏற்பட்ட ஒரு குழப்பமான சூழல், ஊழல், நிதி சுமை இவற்றால் 6 லட்சம் கோடி கடன் சுமையோடு பொறுப்பேற்று கொரோனா காலத்திலும் சீர்கெட்டு கிடந்த தமிழக பொருளாதாரத்தை சீர் தூக்கி, பழுதடைந்து கிடந்த அரசு இயந்திரத்தை சீர் செய்து சிறப்பாக ஆட்சி புரிந்து வருகிறார் தமிழக முதல்வர் என பேசினார்