4ஆண்டுகளுக்குப் பிறகு வெறிச்சோடிய பள்ளிபாளையம் பழைய காவிரி ஆற்று பாலம்
போக்குவரத்து மாற்றப்பட்டதால் பள்ளிபாளையம் பழைய காவிரி ஆற்று பாலம் வெறிச்சோடி காணப்பட்டது.
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் சாலை விரிவாக்கம் மற்றும் மேம்பாலம் அமைக்கும் பணிகள் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வருகிறது. தற்போது பள்ளிபாளையம் பழைய காவிரி ஆற்று பாலம் சாலையில் சாக்கடை கால்வாய் அமைக்கும் பணி மற்றும் தார் சாலை அமைக்கும் பணிகள் நடைபெற உள்ளதால்,
ஈரோட்டில் இருந்து பள்ளிபாளையம் வரும் வாகனங்கள் பள்ளிபாளையம் புதிய காவிரி ஆற்றுப் பாலத்தில் செல்ல வாகன ஓட்டிகளுக்கு நெடுஞ்சாலை துறையினர் அறிவுறுத்திய நிலையில், கடந்த இரண்டு தினங்களாக வாகனங்கள் புதிய பாலத்தில் சென்று வருகிறது. கடந்த 2019, 2020 ஆண்டில் கொரோனா ஊரடங்கு காரணமாக பள்ளிபாளையம் பழைய காவிரி ஆற்று பாலம் பொதுப் போக்குவரத்து ஏதுமின்றி வெறிச்சோடி காணப்பட்ட நிலையில்,
தற்போது நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அதே போல பாலம் வெறிச்சோடி உள்ளதாக பலரும் சமூக வலைதளத்தில் படங்களை பகிர்ந்து தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.