கிராமிய கலைகளின் மூலம் வேளாண்மை திட்ட விழிப்புணர்வு
ஊத்தங்கரை அருகே வேளாண்மை துறை சார்பில் கிராமிய கலைகளின் மூலம் வேளாண்மை திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த அனுமன்தீர்த்தம், பாவக்கல் கிராமத்தில் வேளாண்மை துறையில் மாநில விரிவாக்கத் திட்டங்களின் உறுதுணை சீரமைப்பு திட்டம், வேளாண்மை தொழில் நுட்ப மேலாண்மை முகமை, அட்மா திட்டத்தின் கீழ் கிராமிய கலை நிகழ்ச்சி மூலம் விழிப்புணர்வு செய்தனர்.
வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் முனைவர் கருப்பையா தலைமை வகித்தார். இதில் நக்கல்பட்டி ஸ்ரீவிநாயகா கோலட்டம், கும்மிஆட்ட கிராமிய கலைக்குழு மூலம், வேளாண்மை துறை திட்டம், உழவன் செயலிபயன்பாடு, நுண்ணீர் பாசன திட்டம், இயற்கை வேளாண்மை, மண் பரிசோதனை செய்தல், சிறுதானிய பயிர்களை பயிருடுதல் மற்றும் இடுபொருள் மானிய திட்டங்கள் செயல்படுத்தும் முறைகள், கலைஞரின் அனைத்து கிராம வேளாண்மை வளர்ச்சி திட்டத்தில் இடுப்பொருள் விநியோகம் குறித்து விளக்கப்பட்டது. இதில் வட்டார தொழில் நுட்ப மேலாளர் சதீஷ்குமார் அட்மா திட்டப்பணிகள் குறித்து விளக்கினார். உதவி தொழில் நுட்ப மேலாளர் சாரதி இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தார். கிராம பகுதி பொது மக்கள்பலர் கலந்துக்கொண்டனர்.