திருப்பூரில் அதிமுக பொதுச்செயலாளர் பிரச்சாரம்

திருப்பூர் பாண்டியன் நகரில் அதிமுக பொதுச்செயலாளரும் முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிச்சாமி திருப்பூர் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் அருணாச்சலத்தை ஆதரித்து பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

Update: 2024-04-11 07:46 GMT

எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம்

ஆன்லைன் ரம்மி மூலம் 550 கோடி நிதி பெற்ற திமுக திமுக ஆட்சிக்கு வந்தால் தொழில் நசிவடையும் திருப்பூரில் அதிமுக பொதுச் செயலாளரும், முன்னாள் முதல் அமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி பிரசாரம்

திருப்பூர் பாண்டியன் நகரில், திருப்பூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் பி. அருணாச்சலத்துக்கு இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு கேட்டு, அதிமுக பொதுச் செயலாளரும், முன்னாள் முதல் அமைச்சரும், தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி சிறப்புரையாற்றினார். இந்த கூட்டத்துக்கு கழக தலைமை நிலைய செயலாளரும், மேற்கு மண்டல பொறுப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி கொறடாவுமான எஸ். பி.வேலுமணி தலைமை தாங்கினார். திருப்பூர் மாநகர் மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் துணை சபாநாயகருமான பொள்ளாச்சி ஜெயராமன் வரவேற்றுப் பேசினார்.

ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட செயாளரும், முன்னாள் அமைச்சருமான கே.ஏ.செங்கோட்டையன், திருப்பூர் புறநகர் மேற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான உடுமலை கே.ராதாகிருஷ்ணன், கழக அமைப்பு செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எம்.எஸ்.எம்.ஆனந்தன், ஈரோடு புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.சி.கருப்பண்ணன் திருப்பூர் ஒன்றிய கழக செயலாளரும், திருப்பூர் வடக்கு எம்.எல்.ஏ., வுமான கே.என்.விஜயகுமார் பெருந்துறை எம்.எல்.ஏ., ஜெயக்குமார், கழக அமைப்பு செயலாளரும், முன்னாள் எம்.பியுமான சி.சிவசாமி, அம்மா பேரவை இணை செயலாளர் சு.குணசேகரன், அவைத்தலைவர் பழனிசாமி, முன்னாள் எம். பி. சத்யபாமா, கழக செய்தி தொடர்பாளர், நமது அம்மா நாளிதழ் ஆசிரியர் கல்யாண சுந்தரம் ஆகியோர் முன்னிலை வகித்தார்கள்.

இந்த கூட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ., கரைப்புதூர் நடராஜன், பல்லடம் பரமசிவம், தேமுதிக, எஸ்.டி. பி.ஐ, இந்திய தேசிய லீக், பார்வார்டு பிளாக், மஜத, மஜமுக உள்பட கூட்டணி கட்சி நிர்வாகிகள் திரளாக பங்கேற்றனர். அதிமுக பொதுச் செயலாளரும், முன்னாள் முதல் அமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி பேசியதாவது : அதிமுக கூட்டணி சார்பாக அருணாச்சலம் நிறுத்தப்பட்டு இருக்கிறார். அருணாச்சலம் எளிமையானவர். மத்திய அரசின் திட்டங்களை பெற்றுத்தர இரட்டை இலைக்கு வாக்களியுங்கள். நமது சின்னம், வெற்றி சின்னம் இரட்டை இலைக்கு வாக்களியுங்கள். திருப்பூர் என்று சொன்னாலே பின்னலாடை தொழில் சார்ந்த பகுதி. விடியா திமுக ஆட்சிக்கு வந்ததும் தொழில் மோசமான நிலைக்கு சென்று விட்டது. பல லட்சம் பேர் பணி புரியும் இந்த தொழில் சீரழிந்து விட்டது.

அம்மா அவர்கள் ஆட்சியின் போது சாயப்பட்டறை பிரச்சினை ஏற்பட்ட போது வட்டியில்லா கடனாக 200 கோடி கொடுத்தவர் அம்மா. இன்றைக்கு மோசமான நிலையில் இந்த தொழில் உள்ளது. தொழில் சிறப்பாக நடக்க அருணாச்சலத்துக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களியுங்கள். தொடர் போராட்டம் நடத்தியும் விடியா திமுக அரசு மின் கட்டணத்தை குறைக்கவில்லை. அம்மா அவர்கள் அரசு இந்த தொழிலுக்கு அனைத்து வகையிலும் உதவி செய்த அரசு அதிமுக அரசு. இன்றைக்கு தமிழ்நாட்டை தொழில் நிறைந்த மாநிலமாக உருவாக்கியது அதிமுக. அதிமுக வெற்றி வேட்பாளர்கள் வென்று நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்து தொழில் சரிவில் இருந்து மீட்பார்கள். ஜி.எஸ்.டி. யால் தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது.

இது குறித்தும் நாடாளுமன்றத்தில் பேசி தீர்வு காண அதிமுகவுக்கு வாக்களியுங்கள். திமுக அரசு பொறுப்பேற்ற பின்னர் கடுமையான மின் கட்டண உயர்வு வீடுகளுக்கு 55 சதவீத உயர்ந்துள்ளது. தொழில் மின்சார கட்டணமும் உயர்ந்து விட்டது. விடியா திமுக அரசு கவனம் செலுத்தாத காரணத்தால் நூல் விலையும் உயர்ந்து விட்டது. இதற்கும் எமது அதிமுக குரல் கொடுத்து அதை சரி செய்யும். டாலர் சிட்டி டல் சிட்டியாகி விட்டது. தொழில் பெரும் நசிவு அடைந்து உள்ளது. இந்த நிலை மாற வேண்டும் என்றால் அதிமுக வேட்பாளர் வெற்றி பெற வேண்டும். எப்போது எல்லாம் திமுக ஆட்சிக்கு வந்தால் அப்போதெல்லாம் மின்வெட்டு வரும். 2011-ல் அம்மா அவர்கள் பொறுப்பேற்கும் போது கடுமையான மின் வெட்டு இருந்தது. அவர் பொறுப்பேற்று தடையில்லா மின்சாரம் கொடுத்தார். தமிழ்நாட்டை மின்மிகை மாநிலமாக மாற்றினார். தொழிலுக்கு தடையில்லா மின்சாரம் கொடுத்தோம். மின் கட்டணம் உயர்த்தவில்லை. நல்ல திட்டங்களை மக்களுக்கு கொடுத்து நல்ல பெயர் பெற்ற கட்சி அதிமுக. திமுக ஆட்சியில் எல்லாக் காலங்களிலும் இப்படிப்பட்ட நிலைமை தான். இந்த நிலை விரைவில் மாறி தடையில்லா மின்சாரம் மக்களுக்கு வழங்கப்படும். இன்றைக்கு கைத்தறி, விசைத்தறி தொழில் முடங்கி விட்டது. கைத்தறி நெசவாளர்கள் மானியம் கேட்டார்கள். அதிமுக அரசு மானியம் கொடுத்து அந்த தொழிலை பாதுகாத்தது. நெசவாளர்களுக்கு பசுமை வீடு கட்டிக் கொடுத்தது அதிமுக அரசு. தொழில் பாதுகாத்தது அதிமுக அரசு. பனியன் நூர்பாலைகள் நசிந்து விட்டது.

பனியன் தொழில் முடிந்து விட்டது. மக்கள் வாழ்வாதாரம் கேள்விக்குறி ஆகி விட்டது. அரிசி, பருப்பு விலை உயர்ந்து விட்டது. எல்லா மளிகை பொருட்களும் 40 சதவீதம் ஏறி விட்டது. தொழிலும் இல்லை வருமானமும் இல்லை. ஆனால் விடிய திமுக அரசின் ஸ்டாலிக்கு மக்களை பற்றி கவலை இல்லை.ஓட்டை சட்டியாக இருந்தாலும் கொழுக்கட்டை வெந்தால் சரி என்று தனது குடும்பம் வாழ்ந்தால் போதும் என்று ஆட்சி நடத்துகிறார். நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சொல்கிறார். ஸ்டாலினும் சபரீசனும் 30 ஆயிரம் கோடி ஊழல் செய்து அந்த பணத்தை பதுக்கி விட்டார்கள் என்று நிதி அமைச்சரே சொல்லி உள்ளார். தொழில் முதலீட்டை ஈர்க்க வெளிநாடு செல்வதாக ஸ்டாலின் சொன்னார். அது முதலீட்டை ஈர்க்கவா அல்லது முதலீடு செய்யவா என மக்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது. வெளிநாட்டுக்கு தமிழ்நாட்டு தொழில் அதிபர்களை வரவைத்து ஒப்பந்தம் போடுகிறார்கள். 3 லட்சத்து 5 ஆயிரம் கோடி முதலீட்டை ஈர்த்தது அம்மாவின் அரசு. 302 ஒப்பந்தங்கள் போட்டோம்.

திமுக ஆட்சியில் எதுவுமே நடக்கவில்லை.. தமிழ்நாட்டில் தொழில் முதலீட்டாளர் மாநாட்டை நடத்தி வெற்றி கண்டது அதிமுக அரசு. பள்ளி கல்லூரிகளில் போதை மாத்திரை, ஊசியால் சீரழிகிறார்கள். இதுவரை நடவடிக்கை இல்லை. இதற்கு முன் ஒரு டிஜிபி இருந்தார். அவர் ஒவ்வொரு ஆபரேஷனுக்கு ஓ போட்டுக்கொண்டே போய் விட்டார். திருப்பூர் மாவட்டத்தில் முதியோரை குறிவைத்து கொலை, கொள்ளை நடத்துகிறார்கள். திமுக ஆட்சியில் பாலியல் வன்கொடுமை 58 ஆக அதிகரித்தது. விடிய திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்குது. ஜாபர் சாதிக் போதை கடத்தலில் சம்பந்தப்பட்டவர். அவர் திமுக காரர்களுடன் இருக்கிறது. திமுக கட்சி நிர்வாகிகள் தான் போதை பொருள் சப்ளை செய்கிறார்கள் என அனைவருக்கும் தெரிந்து விட்டது. மதுக்கடையில் ஒரு பாட்டிலுக்கு 10 ரூபாய் வாங்குகிறார்கள். இதன்மூலம் வருஷத்துக்கு 3600 கோடி அவர்களுக்கு கப்பம் கட்ட வேண்டி இருக்கிறது.

இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேசிக் கொண்டிருக்கும் போது செந்தில் பாலாஜி பற்றி ஸ்டாலின்பேசிய வீடியோவை போட்டுக் காட்டினார். இதே போல செந்தில் பாலாஜி ஸ்டாலின் பற்றி பேசிய வீடியோவையும் எடப்பாடி பழனிச்சாமி போட்டுக் காட்டினார். அதிமுகவில் இருந்ததால ஊழல்வாதி, திமுகவிற்கு சென்றால் புண்ணியவதி. செந்தில் பாலாஜி 5 கட்சிக்கு போய் வந்தவர்.ஸ்டாலின் ஆட்சிக்கு வருவதற்கு முன்னால் மனு வாங்குவதற்கு ஒரு பெட்டி வைத்தார்.

ஆட்சிக்கு வந்து விட்ட பின்னர் பெட்டியே காணாமல் போய் விட்டது. மக்களை ஆசையை தூண்டி ஏமாற்றி வாக்குகளை பெற்று ஆட்சிக்கு வந்தவர் ஸ்டாலின். மக்களை ஏமாற்றுவதில் வல்லவர் என்று ஸ்டாலினுக்கு நோபல் பரிசு தரலாம். பெரிய திருடனை பார்த்து ஸ்டாலின் கேட்கிறார். 656 கோடி தேர்தல் பத்திரமாக திமுகவுக்கு வந்து இருக்கிறது. ஆன்லைன் ரம்மி நிறுவனம் தேர்தல் பத்திரம் மூலம் 550 கோடி கொடுத்தது. திமுக ஆட்சி மாறத்தான் போகிறது. இந்த தேர்தல் பத்திர ஊழலை வெளிச்சத்துக்கு கொண்டு வராமல் விட மாட்டோம். ஒரே திட்டத்தை அறிவித்து குழு போடுவதுதான் இவர் வேலை. எல்லாவற்றுக்கும் குழு அமைத்து விடுகிறார்கள். ஆனால் ஸ்டாலின் போட்ட எந்த குழுவும் எதுவும் செய்யவில்லை. 52 குழுவும் சுற்றிக்கொண்டு இருக்கிறது. எந்த திட்டமும் நிறைவேறவில்லை. ஸ்டாலின் திறமையற்ற முதல்வர். பொம்மை முதல்வர்.விலைவாசி உயர்ந்து விட்டது, வீட்டு வரி, சொத்து வரி மின் கட்டணம் என எல்லாவற்றையும் உயர்த்தி விட்டு நலமா என்று கேட்கிறார் ஸ்டாலின். உங்கள் குடும்பம் நலமா இருக்கிறது ஸ்டாலின் அவர்களே மக்கள் நலமாக இல்லை. இன்றைக்கு திருப்பூரில் 940 கோடியில் ஸ்மார்ட் சிட்டி திட்டம் நிறைவேற்றி உள்ளது.1650 கோடியில் அவினாசி அத்திக்கடவு திட்டம் நிறைவேற்றி உள்ளது. நாம் தொடங்கிய திட்டம் என்பதால் அதை கிடப்பில் போட்டு உள்ளார்கள். மீண்டும் அதிமுக ஆட்சி அமைந்ததும் அவினாசி அத்திக்கடவு திட்டம் நிறைவேற்றப்படும்.

திருப்பூரில் அரசு மருத்துவக் கல்லூரி கொண்டு வந்தது அதிமுக. ஒரு மருத்துவக் கல்லூரி கொண்டு வராதது தான் திமுக. திருப்பூர் மாநகராட்சிக்கு இரண்டாம், மூன்றாம் குடிநீர் திட்டம் கொண்டு வந்தது அதிமுக . இப்போது நான்காவது குடிநீர் திட்டம் கொண்டு வந்தது அதிமுக 1050 கோடியில் குடிநீர் திட்டம் கொண்டு வந்தது அதிமுக. ஆனால் இவர் பெயர் வைத்து விட்டார். பேருந்து நிலையத்துக்கு கருணாநிதி பெயர் வைத்து விட்டார்கள். 644 கோடியில் பாதாள சாக்கடைத் திட்டம், பசுமை வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு உள்ளது. 27 கோடியில் வேலம்பாளையம் அரசு சுகாதார நிலையம் கட்டப்பட்டு உள்ளது. திருப்பூர் மாநகராட்சியில் தினசரி மார்க்கெட், சந்தை கட்டப்பட்டு உள்ளது.

இப்படி பல திட்டங்களை அதிமுக ஆட்சியில் கொண்டு வந்தது. திமுக ஸ்டாலின் பிரச்சாரத்தின்போது அதிமுகவை இருண்ட ஆட்சி என்கிறார்கள். எந்த பிரசாரத்தில் கூட திமுக செய்த திட்டம் சொல்லவில்லை. சென்னை உள்பட அனைத்து பகுதிகளிலும் திட்டங்களை கொண்டு வந்து உள்ளது அதிமுக அரசு. பாண்டியன் நகரில் இருந்து புஷ்பா தியேட்டர் வரை 900 கோடியில் பாலம் திட்டமிட்டது அதிமுக. அதை கிடப்பில் போட்டு விட்டார்கள். அருந்ததிய மக்களுக்கு 400 சதுரடியில் கான்கிரீட் வீடுகள் கட்டிக் கொடுத்து உள்ளோம். இது ஏழைகளின் கட்சி. ஏழைகளுக்காக புரட்சித் தலைவர் தொடங்கிய கட்சி. எனவே ஆதி திராவிட மக்கள், அருந்ததியர் மக்கள் தங்கள் ஆதரவை தர வேண்டும். தமிழ்நாடு முழுவதும் திமுக அரசு எப்போது முடியும் என்ற குரல் ஒலித்துக்கொண்டே இருக்கிறது.

எனவே அதிமுக வேட்பாளர் அருணாச்சலத்துக்கு இரட்டை இலைக்கு வாக்களியுங்கள்.திருப்பூர் தொகுதியில் கோபியிலும், இங்கேயும் பொதுமக்கள் மக்கள் வெள்ளமாக கலந்து கொண்டு இருக்கிறீர்கள். இது நம் வெற்றிக்கு சாட்சி. ஒற்றை விரலால் ஓங்கி அடிப்போம். விடிய திமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்புவோம். வாக்களிப்போம் இரட்டை இலைக்கு. இவ்வாறு எடப்பாடி கே.பழனிசாமி பேசினார்.முன்னதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமிக்கு 508 பெண்கள் பூரண கும்ப மரியாதை செலுத்தினார் . மேளதாளங்கள் முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News