திமுக அரசைக் கண்டித்து தஞ்சாவூரில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்
திமுக அரசைக் கண்டித்து தஞ்சாவூரில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
பட்டியல் இன மாணவி மீது வன்கொடுமைகளை ஏவி கொடூரத் தாக்குதல் நடத்தியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்காத திமுக அரசைக் கண்டித்து தஞ்சாவூர் பனகல் கட்டடம் எதிரில் அதிமுகவினர் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில், அதிமுக மீனவர் அணி இணைச் செயலரும், முன்னாள் அமைச்சருமான கே.ஏ. ஜெயபால் பேசியது: எடப்பாடி பழனிசாமி தலைமையில் நான்கரை ஆண்டுகள் நடைபெற்ற ஆட்சியை அனைத்து தரப்பு மக்கள் மட்டுமல்லாமல், திமுகவினரும் பாராட்டினர்.
எடப்பாடி பழனிசாமி ஆட்சிக்காலத்தில் பயிர் காப்பீடு, நிவாரணம் போன்றவை முறையாக வழங்கப்பட்டது. ஆனால், இப்போது மோசமான ஆட்சி நடைபெறுகிறது. தொழிலாளர்கள், பாட்டாளிகள், விவசாயிகள் என அனைத்து தரப்பினருக்கும் அதிமுகதான் துணை நிற்கிறது. அதிமுக ஆட்சியில் நடைபெற்ற ஜாக்டோ - ஜியோ போராட்டத்தில் ஸ்டாலின் தாமாகவே முன் சென்று பங்கேற்று, திமுக ஆட்சிக்கு வந்தவுடன் பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்படும் என வாக்குறுதி அளித்தார்.
திமுக வெற்றி பெறுவதற்கு அரசு ஊழியர்தான் காரணமாக இருந்தும், பழைய ஓய்வூதியத் திட்டத்தை இன்னும் அமல்படுத்தவில்லை. ஸ்பெயினில் முதலீட்டை ஈர்ப்பதற்கு பதிலாக, தான் முதலீடு செய்வதற்காகச் சென்றுள்ளார். இது ஒரு ஏமாற்று வேலை என்றார் ஜெயபால். இந்த ஆர்ப்பாட்டத்துக்கு அதிமுக தஞ்சாவூர் மத்திய மாவட்டச் செயலர் மா. சேகர் தலைமை வகித்தார். அமைப்புச் செயலர் ஆர். காந்தி, கொள்கை பரப்புச் செயலர் துரை. திருஞானம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.