ஏர்வாடி தர்ஹா சந்தனக்கூடு திருவிழா

ராமநாதபுரம் மாவட்டம், ஏர்வாடி தர்ஹா 850 ஆம் ஆண்டு சமூக நல்லிணக்க சந்தனக்கூடு திருவிழா ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.

Update: 2024-06-02 05:04 GMT

ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை அருகே ஏர்வாடி மகான் குத்பு சுல்தான் செய்யது இபுராகிம் ஷகீது ஒலியுல்லாஹ் பாதுஷா நாயகம் தர்ஹாவில் சந்தனக்கூடு சமூக நல்லிணக்க திருவிழா மே 9ல் மவ்லீது ஷரீப் ஓதப்பட்டு. மே 19 ல் கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான சந்தனக்கூடு திருவிழா ஊர்வலம் நேற்று அதிகாலை 3:30 மணியளவில் முஜாவீர் நல்ல இபுராஹீம் மஹாவில் இருந்து அலங்கார ரதத்துடன் சந்தனக்கூடு யானை, குதிரை நடனம், பாரம்பரிய சம்பிரதாயப்படி தீப்பந்தம் பிடித்துவாறும், இஸ்லாமிய மார்க்க பாடல் பாடியவாறு ஊர்வலம் புறப்பட்டு, அதிகாலை 5 மணியளவில் தர்ஹா வந்தடைந்தது.

தர்ஹாவை 3 முறை சந்தனக்கூடு வலம் வந்து சிறப்பு பிரார்த்தனைக்கு பின் மக்பராவில் சந்தனம் பூசப்பட்டது. உலக அமைதி, சமூக நல்லிணக்கம், எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டி நடந்த பிரார்த்தனையில் ஆயிரகணக்கானோர் பங்கேற்றனர். திருவிழாவை காண கேரளா உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் குவிந்தனர். வண்ண மின் விளக்கொளி அலங்காரத்தில் தர்ஹா ஜொலித்தது. அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் ஏர்வாடி தர்ஹாவிற்கு இயக்கப்பட்டன.

தர்ஹா வளாகத்தில் சிறப்பு மருத்துவக்குழுவினர் முகாமிட்டு சிசிச்சை அளித்தனர். தர்ஹா வளாகத்தில் கூடுதல் கேமராக்கள் பொருத்தப்பட்டு பக்தர்களின் நடவடிக்கைகளை போலீசார் கண்காணித்தனர். எஸ்.பி., சந்தீஸ் தலைமையில் போலீசார் மற்றும் ஊர்க்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். ஜூன் 7 மாலை:5.30 மணியளவில் கொடியிறக்கம் நடைபெற்று நெய் சோறு நார்ஷா வழங்கப்படும் . ஏற்பாடுகளை தர்ஹா ஹக்தர் நிர்வாக சபை கமிட்டியின் தலைவர் முகமது பாக்கீர் சுல்தான் லெவ்வை, செயலாளர் செய்யது சிராஜூதீன் லெவ்வை, துணை தலைவர் சாதிக் பாஷா லெவ்வை உள்ளிட்ட தர்கா கமிட்டி ஹக்தார்கள் செய்திருந்தனர்.

Tags:    

Similar News