ஆம்பூர் : தீ விபத்தில் எலும்பு கூடான வாகனங்கள்
ஆம்பூர் அருகே லாரி பார்க்கிங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் பார்க்கிங்கில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மினி வேன் உட்பட இரண்டு வாகனங்கள் தீயில் எரிந்து எலும்பு கூடு போல் ஆனது.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த சான்றோர்குப்பம் பகுதியில் ஆறுமுகம் என்பவருக்கு சொந்தமான லாரி பார்க்கிங் அருகில் உள்ள குப்பைகளை மர்ம நபர்கள் தீயிட்டு கொளுத்தி விட்டு சென்றுள்ளனர். இந்த தீ விபத்தானது மளமளவென எரிந்து அங்கிருந்த லாரி பார்க்கிங்கில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மினி வேன் மற்றும் மினி லாரி உட்பட இரண்டு வாகனங்கள் தீப்பிடித்து எரிந்து கொண்டிருப்பதை அங்கிருந்த சிலர் தீயணைப்பு துறை மற்றும் காவல்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர்.
தகவலின் பேரில் விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் தீயை அணைக்க நீண்ட நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இருப்பினும் தீயணைப்பு வாகனத்தில் இருந்த தண்ணீர் தீர்ந்து விட்டதால் போதிய தண்ணீர் இல்லாததால் மினி வேன் மற்றும் மினி லாரி இரண்டும் முற்றிலுமாக எரிந்து எலும்பு கூடு போல் ஆனது.
மேலும் அங்கிருந்த குடியிருப்பு வீடுகளுக்கு அருகில் குப்பை மற்றும் செடி கொடிகள் தீப்பற்றி எரிந்ததால் அப்பகுதி மக்கள் அலறியடித்து குடங்களில் தண்ணீர் கொண்டு வந்து தீயணைப்பு வீரர்களுடன் இணைந்து தீயை அணைத்தனர் இதனால் அப்பகுதியில் புகை மூட்டம் அதிகமானதால் சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் அங்கிருந்த பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர்