புஷ்பப் பல்லக்கில் அம்மன் திருவீதி உலா

திருச்சுழி மாரியம்மன் கோவிலில் மாசித் திருவிழாவை முன்னிட்டு, புஷ்பப் பல்லக்கில் அம்மன் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

Update: 2024-02-22 03:11 GMT

விருதுநகர் மாவட்டம் திருச்சுழியில் அருள்மிகு ஸ்ரீமாரியம்மன் கோவில் மாசி திருவிழாவை முன்னிட்டு அம்மன் புஷ்பப் பல்லக்கில் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். திருச்சுழியில் உள்ள இராமநாதபுரம் சமஸ்தானம் தேவஸ்தானத்திற்குப் பாத்தியப்பட்ட சுமார் 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீமாரியம்மன் கோவில் மாசி பொங்கல் திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இக்கோவில் திருவிழா கடந்த வாரம் வியாழன் அன்று இரவு கொடியேற்றத்துடன் துவங்கியது .

இதனையடுத்து, நாள்தோறும் அம்மனுக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு விசேஷ பூஜைகள் நடைபெற்று வருகின்றன. இதனைத் தொடர்ந்து தினந்தோறும் சிறப்பு அலங்காரத்துடன் அம்மன் காலையும், இரவும் வெள்ளி ரிஷப வாகனம், மயில் வாகனம், சிம்மவாகனம் என பல்வேறு வாகனங்களில் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்து வருகின்றார். வரும் வெள்ளிக்கிழமை அன்று அம்மனுக்கு மாசிப்பொங்கல் உற்சவ விழா நடைபெறுவதை ஒட்டி இன்று அம்மன் புஷ்பப் பல்லக்கில் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

முன்னதாக, சிறப்பு நாதஸ்வர கச்சேரி மற்றும் வான வேடிக்கைகளுடன் அம்மன் புஷ்பப் பல்லக்கில் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு தரிசனம் அளித்தார். அம்மன் புஷ்பப் பல்லக்கில் திருவீதி உலாவைக் காண, திருச்சுழி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் நீண்ட நேரம் காத்திருந்து அம்மனைத் தரிசனம் செய்தனர்.

Tags:    

Similar News