சாலை விபத்தில் காயமடைந்த முதியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
இருசக்கர வாகனத்தின் மீது வேன் மோதிய விபத்தில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வந்த முதியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.;
Update: 2024-03-24 07:13 GMT
ராஜேந்திரன்
திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே கோட்டைக்காரமேடு ஈஸ்வரி நகரைச் சேர்ந்தவர் 60 வயதான ராஜேந்திரன். இவர் கடந்த 22 ம் தேதி அதிகாலையில் தனது மோட்டார் பைக்கில் திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்தார். அதேபோல் வேலூர் மாவட்டம் துரைப்பாக்கத்தைச் சேர்ந்த 34 வயதான சரவணன் வேனில் பின்னால் சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் மாருதி நகரில் சென்று கொண்டிருந்தபோது முன்னாள் சென்ற மோட்டார் பைக் மீது பின்னால் வந்த வேன் எதிர்பாராத விதமாக மோதி விபத்து ஏற்பட்டது. இதில் நிலைத் தடுமாறி கீழே விழுந்த ராஜேந்திரன் படுகாயம் அடைந்தார். விபத்தைக் கண்ட அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு தொடர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து கொள்ளிடம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.