முன் கூட்டியே மூடப்பட்ட அண்ணாமலையார் கோயில்- பக்தர்கள் ஏமாற்றம்.
ஐப்பசி மாத பவுர்ணமியை யொட்டி அண்ணாமலையார் கோயிலுக்கும், கிரிவலம் செல்லவும் கூட்டம் அலைமோதியது. கூட்டம் அதிகரித்ததால் கோயில் முன்கூட்டியே மூடப்பட்டது. இதனால் பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
ஐப்பசி பவுர்ணமி அன்று அசுவினிக்காக சந்திரன் அமிர்த கலையாகிய 16 கலைகளுடன் முழுப்பொலிவுடன் காட்சியளிக்கிறான் என்பது புராணம். இந்த நாளில் சந்திரன் பூமியை சுற்றும் நீள்வட்டப்பாதையில் பூமிக்கு மிக அருகாமையில் வருகிறது என்பது அறிவியல் உண்மை. அன்னம் என்பது பஞ்சபூதங்ளை தன்னுள் அடக்கியது. அதாவது லிங்க வடிவத்திலுள்ள அரிசி, நிலத்தில் விளைந்தது. ஆகாயத்தில் உலவும் காற்றின் உதவியால் எரியும் தீயில், அரிசியானது நீரில் வெந்து அன்னமாகிறது. இந்த அன்னத்தால் பூதநாயகனாகிய பஞ்சபூதங்களை தன்னுள் அடக்கிய சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்து, இந்த ஐப்பசி பூரண சந்திர நன்னாளில் வழிபாடு செய்யும்போது, உடல் பிணிகள் ஓடிப்போகின்றன. சகல சௌபாக்கியங்களும் வந்து சேர்கின்றன. அபிஷேக அன்னத்தை உட்கொண்டால் திருமண தடை விலகும். குழந்தை பாக்கியம் கிட்டும் என்பது ஐதீகம். இன்று அன்னாபிஷேகத்தை யொட்டியும், பவுர்ணமியை யொட்டியும் அண்ணாமலையாரை தரிசனம் செய்ய திருவண்ணாமலையில் காலையிலேயே பக்தர்கள் குவிந்தனர். அவர்கள் நீண்ட வரிசையில் நிற்க வைக்கப்பட்டு தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். எப்போதும் இல்லாத அளவு காந்தி சிலையை தாண்டி கியூ வரிசை நீண்டது.
அதே போல் அண்ணாமலையார் கோயில் நான்கு கோபுர வீதிகளிலும் கூட்டம் நிரம்பி காணப்பட்டது. 6 மணி நேரம் காத்திருத்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். அன்னாபிஷேகத்தை யொட்டி மாலை 3 மணி முதல் மாலை 6 மணி வரை அண்ணாமலையார் கோயிலுக்கு தரிசனம் செய்ய பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. கோயிலுக்குள் கூட்டம் அதிகமாக இருந்ததால் அவர்கள் தரிசனம் செய்ய பகல் 3 மணி வரை ஆகும்.என்பதால் பகல் 12 மணிக்கே கோயில் கதவுகள் அடைக்கப்பட்டது. அன்னாபிஷேகத்தை முன்னிட்டு அண்ணாமலையார் கோயில் மடப்பள்ளியில் தயாரான 100 கிலோ சாதத்தை கொண்டு கருவறையில் இருக்கும் அண்ணாமலையாரின் திருமேனி முழுவதும் அலங்கரிக்கப்பட்டது. இதே போல் கல்யாண சுந்தரேஸ்வரரும் 25 கிலோ சாதத்தால் அலங்கரிக்கப்பட்டார். மகா தீபாராதனை நடைபெற்ற பிறகு அன்னம் கலைக்கப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது.
அன்னாபிஷேகம் முடிந்து மாலை 6 மணிக்கு கோயில் திறக்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் கோயிலுக்குள் சென்றனர். கூட்டத்தை கட்டுப்படுத்தும் விதமாக மீண்டும் கோயில் 8 மணிக்கு மூடப்பட்டது. 2 மணி நேரம் மட்டுமே கோயில் திறக்கப்பட்டதால் பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.