அண்ணா பிறந்த நாள் ஊர்வலம் - திமுகவினருக்கு அமைச்சர் அழைப்பு
தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க சார்பில் நாளை நடக்கும் பேரறிஞர் அண்ணாவின் 55வது நினைவு தின அமைதி ஊர்வலத்தில் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்து கொள்ள அமைச்சர் கீதா ஜீவன் அழைப்பு விடுத்துள்ளார்.
திமுக வடக்கு மாவட்டச் செயலாளர் அமைச்சர் பி.கீதாஜீவன் வெளியிட்டுள்ள அறிக்கை : தி.மு.கழகத்தை தோற்றுவித்தவரும், கடமை, கண்ணியம் கட்டுப்பாடு எனும் தாரக மந்திரத்தை கழகத்தினருக்கு கற்றுத் தந்தவரும், தமிழ் இனம், தமிழ் மொழி என்ற உணர்வுமிக்க கருத்துக்களை மக்களிடம் பரப்பி தமிழருக்கு பாதுகாப்பு இயக்கமாக தி.மு.கழகத்தை மாற்றி அதன் மூலம் கழக ஆட்சியை தமிழ்நாட்டில் அமைத்தவர் பேரறிஞர் பெருந்தகை அறிஞர் அண்ணா. அவர் முதலமைச்சராக இருந்த இரண்டு ஆண்டு காலத்தில் தமிழ்நாடு என பெயர் மாற்றம், இருமொழிக் கொள்கை. சுயமரியாதை திருமணச் சட்டம் போன்ற பல்வேறு நல்ல திட்டங்களைக் கொண்டு வந்தார்.
அன்னாருடைய 55வது நினைவு தினம் வருகிற பிப்ரவரி - 3 ம் தேதி சனிக்கிழமை அன்று வருகிறது. அன்றைய தினம் காலை 9.00 மணி அளவில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க சார்பில் மாவட்டச் செயலாளராகிய என்னுடைய தலைமையில் மாபெரும் அமைதி ஊர்வலம் நடைபெற இருக்கிறது. இந்த ஊர்வலமானது தூத்துக்குடி ராஜாஜி பூங்கா முன்பிருந்து தொடங்கி பாளைரோடு வழியாக காய்கறி மார்க்கெட் சந்திப்பில் உள்ள பேரறிஞர் அண்ணாவின் திருவுருவச் சிலை அமைந்திருக்கும் இடத்தில் முடிவடைகிறது. அங்கிருக்கும் பேரறிஞர் அண்ணாவின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட இருக்கிறது.
இந்நிகழ்ச்சியில் தூத்துக்குடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மாவட்டக் கழக நிர்வாகிகள், தலைமைச் செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், மாநகர, பகுதி, வார்டு கழக நிர்வாகிகள், மாநகர வார்டு செயலாளர்கள், பிரதிநிதிகள், மாநகராட்சி கவுன்சிலர்கள் மற்றும் கழக சார்பு அணிகளின் நிர்வாகிகள், கழக தோழர்கள் அனைவரும் இதனையே அழைப்பாக ஏற்று பெருந்திரளாக கலந்து கொள்ள அன்புடன் அழைக்கிறேன். தூத்துக்குடி வடக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட அனைத்து நகர, ஒன்றிய, பேரூர், கிளைக்கழக அளவில் பேரறிஞர் அண்ணாவின் திருவுருவப் படத்தை வைத்து மலர் அஞ்சலி செலுத்திடவும் கழக நிர்வாகிகளை கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.