பெண் போலீஸ் ஏட்டு உள்பட 2 பேர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு

Update: 2023-12-21 03:06 GMT

வழக்குப்பதிவு 

சேலம் அருகே நிலவாரப்பட்டியை சேர்ந்தவர் தங்கராஜ். இவர் சேலம் லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் ஒன்று கொடுத்தார். அதில் சேலம் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் ஏட்டுகள் பிரபாவதி, மணி ஆகியோர் தன்னிடம் மாதந்தோறும் ரூ.20 ஆயிரம் கொடுத்து விட்டு ரேஷன் அரிசி கடத்தி விற்பனை செய்து கொள்ளலாம் என்றும், இது தொடர்பாக வழக்குப்பதிவு ஏதும் செய்ய மாட்டோம் என்றும் கூறுகின்றனர். எனவே லஞ்ச பணம் கேட்கும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.

Advertisement

இதையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசார் கூறிய படி ஏட்டு ஒருவருக்கு போன் செய்து தங்கராஜ் பேசியதாக கூறப்படுகிறது. அப்போது அந்த ஏட்டு நாழிக்கல்பட்டியை சேர்ந்த குமரேசன் (48) என்பவர் கந்தம்பட்டி பைபாஸ் ரோட்டுக்கு வருவார் அவரிடம் பணத்தை கொடுங்கள் என்று கூறினார். அதைத்தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு போலீசார் ரசாயன பவுடர் தடவிய ரூ.10 ஆயிரத்தை எடுத்து சென்று குமரேசன், தங்கராஜிடம் கொடுத்தார். உடனே அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் குமரேசனை கையும், களவுமாக பிடித்தனர். பின்னர் அவரை போலீசார் கைது செய்து விசாரித்த போது, ஏட்டுகள் பிரபாவதி, மணி ஆகியோர் கூறியதன் பேரில் தங்கராஜிடம் குமரேசன் பணத்தை பெற்றது தெரிந்தது. இதையடுத்து போலீஸ் ஏட்டுகள் பிரபாவதி, மணி ஆகியோர் மீது இன்ஸ்பெக்டர் நரேந்திரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

Tags:    

Similar News