கள்ளச்சாராய ஒழிப்பு விழிப்புணர்வு பிரச்சாரம் - துவக்கி வைத்த டிஎஸ்பி
அரகண்டநல்லூரில் பொதுமக்களின் ஒத்துழைப்புடன் முழுமையாக கள்ளச்சாராயத்தை ஒழிக்கும் பொருட்டு விழுப்புரம் டிஎஸ்பி சுரேஷ் தலைமையில் பொதுமக்கள், மக்கள் பிரதிநிதிகள் கலந்து கொண்ட விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.
அரகண்டநல்லூர் காவல் சரகத்திற்கு உட்பட்ட வீரபாண்டி, ஒட்டம்பட்டு, அருணாபுரம், வசந்தகிருஷ்ணாபுரம் உள்ளிட்ட இடங்களில் பல ஆண்டுகளாக கள்ளச்சாராயம் காய்ச்சி விற்கும் சம்பவங்கள் அரங்கேறி வருகிறது.இந்நிலையில் பொதுமக்களின் ஒத்துழைப்புடன் இப்பகுதியில் முழுமையாக கள்ளச்சாராயத்தை அகற்ற வேண்டும் என்ற முனைப்பில், விழுப்புரம் கலெக்டர் பழனி மற்றும் மாவட்ட எஸ்.பி., தீபக்சிவாச் உத்தரவின் பேரில் டி.எஸ்.பி., சுரேஷ் தலைமையில் அரகண்டநல்லூரில் உள்ள ஓம் சக்தி திருமண மண்டபத்தில் ஊராட்சி தலைவர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், கிராம உதவியாளர்கள், ஊராட்சி செயலர்கள் ஆகியோர் அடங்கிய விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.
சப் இன்ஸ்பெக்டர் லியோ சார்லஸ் வரவேற்றார்.டி.எஸ்.பி., சுரேஷ் தலைமை தாங்கி கள்ளச்சாராயம் காய்ச்சுவது, விற்பது சமூகத்திற்கு பெரும் தீங்காக உருவெடுத்து இருப்பதால், இதனை இப்பகுதியில் இருந்து முற்றிலுமாக அகற்ற அனைவரின் ஒத்துழைப்பும் அவசியமாகிறது, எனவே கள்ளச்சாராயம் குறித்த தகவல்களை நேரடியாக போலீசாருக்கு எந்த நேரத்திலும் தெரிவிக்கலாம் என தெரிவித்தார்.தொடர்ந்து வீரபாண்டியில் கள்ளச்சாராயத்திற்கு எதிரான விழிப்புணர்வு பிரச்சாரத்தை பொதுமக்கள் மத்தியில் டி.எஸ்.பி., மற்றும் போலீசார் மேற்கொண்டனர்.