அரசு பள்ளியில் மாணவர்களுக்கு போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு
வெள்ளகோவில் அரசு பள்ளியில் மாணவர்களுக்கு போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு நடைபெற்றது.
தேசிய போதை பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு காவல்துறை, சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை சார்பில் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நிகழ்ச்சிக்கு காங்கேயம் துணை காவல் கண்காணிப்பாளர் பார்த்திபன் தலைமை தாங்கினார். வெள்ளகோவில் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் ராஜலட்சுமி, காவல் ஆய்வாளர் ஞானப்பிரகாசம் முன்னிலை வகித்தனர். திருப்பூர் மாவட்ட புகையிலை தடுப்பு மைய சமூக பணியாளர் பிரவீன் சிறப்புரை ஆற்றினார்.
நிகழ்ச்சியில் போதைப்பொருள் பயன்பாட்டின் தீய விளைவுகள் புகையிலை மற்றும் புகை பிடித்தல் போதைப் பொருட்களால் ஏற்படும் பின் விளைவுகள் பற்றியும் போதைப்பொருட்களை தவிர்க்கும் வழிமுறைகள் குறித்தும் மாணவ மாணவிகளுக்கு எடுத்து கூறப்பட்டது. போதை பொருள் ஒழிப்பு குறித்து அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். இதில் பள்ளி தலைமை ஆசிரியர் குணசேகரன், காவல் உதவி ஆய்வாளர் ஜெயக்குமார், முத்துக்குமார் மற்றும் ஆசிரியர்கள், பள்ளி மாணவ,மாணவிகள் பங்கேற்றனர்.