ஆட்சியர் தலைமையில் போதைப் பொருள் தடுப்பு ஆய்வு கூட்டம்
பள்ளிக்கு 100 மீட்டர் அருகில் போதைப் பொருள் விற்பனை செய்யப்படுகிறதா என்று தொடர்ந்து ஆய்வு மேற்கொள்ளப்பட வேண்டும். பள்ளிகளில் குழந்தைகளுக்கு உளவியல் ஆலோசனைகள் வழங்க வேண்டும்.என ஆட்சியர் உமா அறிவுறுத்தல் வழங்கினார்.
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியர் மருத்துவர் ச.உமா தலைமையில் போதைப் பொருள்கள் தடுப்பு குறித்த மாதாந்திர ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் பேசுகையில் தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவின்படி, போதைப் பொருள்கள் தடுப்பு சம்பந்தமாக, மாவட்ட அளவில் ஒருங்கிணைப்புக் கூட்டம் காவல் துறை, வருவாய்த் துறை அலுவலர்கள் மற்றும் தமிழ்நாடு மாநில வாணிபக்கழகத்தின் (டாஸ்மாக்) மாவட்ட மேலாளர் ஆகியோரைக் கொண்டு மாதந்தோறும் நடத்தப்பட்டு வருகின்றன.
மேலும், நாமக்கல் மாவட்டத்தில் போதை பொருள் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளும் வகையில் கூட்டு ஆய்வுக்குழு மற்றும் அதனை கண்காணிக்கும் வகையில் மாவட்ட அளவிலான கண்காணிப்பு குழு போன்ற குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளது. கள்ளச்சாராயம் மற்றும் சட்ட விரோத மதுபானம் விற்பனை ஈடுபடுவர்களின் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் தணிக்கையின்போது அனுமதியற்ற மதுக்கூடங்கள் நடைபெறுவதை கண்டறியவும், மதுபானங்களை கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதை கண்டறியவும், கள்ளசாராயம் மற்றும் வெளிமாநில மதுவகைகள் எதுவும் விற்பனை செய்யப்படுகிறதா எனவும், சாலையோர கடைகள் மற்றும் தாபாக்களில் மதுபானங்களை கள்ளத்தனமாக விற்பனை செய்வதை கண்டறிய ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.
குறிப்பாக பள்ளிக்கு 100 மீட்டர் அருகில் போதைப் பொருள் விற்பனை செய்யப்படுகிறதா என்று தொடர்ந்து ஆய்வு மேற்கொள்ளப்பட வேண்டும். பள்ளிகளில் குழந்தைகளுக்கு உளவியல் ஆலோசனைகள் வழங்க வேண்டும். நாமக்கல் மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள கூட்டு ஆய்வுக்குழு ஒருங்கிணைந்து செயல்பட்டு, போதைப்பொருள் உபயோகத்தை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் பேசினார்.
மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தலின்படி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தஎஸ்.இராஜேஸ்கண்ணன் தலைமையில் குழு அமைக்கப்பட்டு, நாமக்கல் மாவட்டத்தில் கொல்லிமலை, செங்கரை, முள்ளுக்குறுச்சி, மெட்டாலா, ஆயில்பட்டி, வடுகம், எருமப்பட்டி, வெப்படை, பள்ளிபாளையம், கொமராபாளையம், ஜேடர்பாளையம், ஜேடர்பாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட இடங்களிலும், தொடர்ந்து பல்வேறு இடங்களிலும் போதை பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றதா என சோதனை மற்றும் கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் மருத்துவர் ரெ.சுமன், திருச்செங்கோடு வருவாய் கோட்டாட்சியர் சே.சுகந்தி, முதன்மை கல்வி அலுவலர் ப.மகேஸ்வரி உட்பட காவல்துறையினர் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.