மக்கள் விரோத பா.ஜ.க ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் - கி.வீரமணி

பிரதமர் உள்ளிட்ட பா.ஜனதா கட்சி தலைவர்களை எதிர்த்து பேசினால் சி.பி.ஐ., வருமான வரி ரெய்டு, அமலாக்கத்துறை சோதனை தான் நடக்கும். இந்த 3 ஆயுதங்களை வைத்து மிரட்டி தான் அவர்கள் ஆட்சி நடத்தி வருகிறார்கள். மக்கள் விரோத பா.ஜனதா ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என சேலத்தில் நடந்த தேர்தல் பொதுக்கூட்டத்தில் திக தலைவர் கி.வீரமணி பேசினார்.

Update: 2024-04-09 04:20 GMT

கி.வீரமணி பிரசாரம்  

சேலம் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் டி.எம்.செல்வகணபதியை ஆதரித்து திராவிடர் கழகம் சார்பில் அம்மாபேட்டை காந்தி மைதானம் பகுதியில் நேற்று மாலை தேர்தல் பொதுக்கூட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் இளவழகன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் வைரம் வரவேற்றார்.

திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி கலந்து கொண்டு பேசியதாவது:- ஏப்ரல் 19-ந் தேதி நடக்கும் நாடாளுமன்ற தேர்தலானது மிக, மிக முக்கியமான தேர்தலாகும். யார் பிரதமராக வரவேண்டும் என்பதை விட, யார் பிரதமராக வரக்கூடாது என்பதை வாக்காளர்கள் பார்க்க வேண்டும். கடந்த 10 ஆண்டுகால பா.ஜனதா ஆட்சியில் மக்களுக்கு தேவையான எந்த திட்டங்களையும் செயல்படுத்தவில்லை. ஆட்சிக்கு வந்தவுடன் ஊழலை ஒழிப்பேன் என்று கூறினார்கள். ஆனால் ஒழித்தார்களா?

மக்களை ஏமாற்றி வஞ்சிக்கிற வகையில் பிரதமர் மோடி தலைமையில் ஆட்சி நடந்துள்ளது. பிரதமர் மோடி மீது தனிப்பட்ட விரோதம் கிடையாது. ஆனால் பா.ஜனதா ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் லட்சியம், கோட்பாடு என்ன? நமது லட்சியம் என்ன? என்பதை பார்க்க வேண்டும். பிரதமர் உள்ளிட்ட பா.ஜனதா கட்சி தலைவர்களை எதிர்த்து பேசினால் சி.பி.ஐ., வருமான வரி ரெய்டு, அமலாக்கத்துறை சோதனை தான் நடக்கும். இந்த 3 ஆயுதங்களை வைத்து மிரட்டி தான் அவர்கள் ஆட்சி நடத்தி வருகிறார்கள். மக்கள் விரோத பா.ஜனதா ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப வேண்டும். பா.ஜனதாவுக்கு எதிராக உள்ள எதிர்க்கட்சி தலைவர்களை ஒருங்கிணைக்கும் பெரும் முயற்சியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஈடுபட்டுள்ளார். எனவே இந்தியா கூட்டணி வேட்பாளர்களை வெற்றி பெற செய்ய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்

Tags:    

Similar News