ஆதீனத்தின் ஆபாச வீடியோ வழக்கு : முன் ஜாமீன் தள்ளுபடி
மயிலாடுதுறை தருமபுரம் மிரட்டல் வழக்கில் கைதான நபர்களுக்கு ஜாமீன் மறுத்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனத்தின் 27 -வது தலைமை மடாதிபதியாக மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சாமிகள் சம்பந்தப்பட்ட ஆபாச வீடியோ மற்றும் ஆடியோ இருப்பதாக கூறி சிலர் மிரட்டல் விடுத்து வந்தனர். இதுதொடர்பாக மடாதிபதியின் சகோதரரும், தருமபுரம் ஆதீனத்துக்கு சொந்தமான திருக்கடையூர் தேவஸ்தானத்தின் கணக்காளராகவும் உள்ள விருத்தகிரி என்பவர் மயிலாடுதுறை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் அடிப்படையில் தஞ்சை வடக்கு மாவட்ட பாஜக பொதுச் செயலாளர் ஆடுதுறை வினோத்(வயது 32), சீர்காழி ஒன்றிய பாஜக முன்னாள் தலைவர் திருவெண்காடு விக்னேஷ்(33), செம்பனார்கோவில் தனியார் கல்வி நிறுவனங்களின் தாளாளர் குடியரசு(39), தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் தாலுகா நெய்குப்பை கிராமத்தைச் சேர்ந்த ஸ்ரீநிவாஸ்(28) ஆகியோரை கைது செய்த போலீசார், இந்திய தண்டனைச் சட்டம் 323, 307,389, 506(2), 120-பி ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.
பின்னர் கைது செய்யப்பட்ட 4 பேரையும் நீதிமன்ற உத்தரவின்படி ஜெயிலில் அடைத்துள்ளனர். மேலும் வழக்கு தொடர்பாக பாஜக மாவட்ட தலைவர் அகோரம், திமுக ஒன்றிய செயலாளர் விஜயகுமார், ஆதீனம் உதவியாளர் செந்தில் செய்யூர் வக்கீல் ஜெயச்சந்திரன், திருச்சியைச் சேர்ந்த போட்டோகிராபர் பிரபாகரன் ஆகிய 5 பேரையும் பிடிக்க அமைக்கப்பட்டுள்ள தனிப்படை போலீசார் அவர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
இந்த நிலையில் கைதாகி சிறையில் உள்ள வினோத், ஸ்ரீநிவாஸ் மற்றும் குடியரசு ஆகிய 3 பேரும் தனித்தனியாக அவர்களது வழக்கறிஞர்கள் மூலம் மயிலாடுதுறை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் ஜாமின் மனுக்கள் தாக்கல் செய்தனர். இந்த ஜாமீன் மனுக்கள் மீதான விசாரணை நேற்று நடந்தது. அப்போது அரசு வழக்கறிஞர் சேயோன் 3 பேரின் ஜாமீனில் வெளியேவிட எதிர்ப்பு தெரிவித்தார். இதனையடுத்து மாவட்ட அமர்வு நீதிபதி ராஜவேலு 3 பேரின் ஜாமீன் மனுக்களையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.