நாமக்கல் மாவட்டத்தில் 567 தேர்தல் அலுவலர்கள் நியமனம்
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நாமக்கல் மாவட்டத்தில் நியமிக்கப்பட்ட தேர்தல் ஆணையர்களுக்கான பயிற்சி கூட்டம் நடைபெற்றது.
வரவிருக்கும் பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு, நாமக்கல் மாவட்டத்தில் தேர்தல் பணியில் ஈடுபட உள்ள 567 அதிகாரிகளுக்கான பயிற்சிக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ்கண்ணன், டிஆர்ஓ சுமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாவட்ட ஆட்சியர் உமா, நிகழ்ச்சிக்கு தலைமை வகித்துப் பேசியதாவது.. விரைவில் நடைபெற உள்ள மக்களவை தேர்தலை முன்னிட்டு, தொடர்புடைய மாவட்ட தேர்தல் அலுவலர்கள், தேர்தல் செலவின கண்காணிப்பு குழுக்கள், நிலையான கண்காணிப்பு குழு மற்றும் மண்டல கண்காணிப்பு குழுக்களை ஏற்படுத்தி, மேற்படி குழுக்களுக்கு பயிற்சிகளை வழங்கிட இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
அதன்படி, நாமக்கல் மாவட்டத்தில் 6 சட்டசபை தொகுதிகளுக்கு உட்பட்ட உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் (AROs)- 6, மண்டல அலுவலர்கள் (Zonal Officers)- 137, உதவி மண்டல அலுவலர்கள் (Assistant Zonal Officers)- 137, காவல் துறை சார்ந்த மண்டல அலுவலர்கள் (Police Sector Officers)- 137, மற்றும் தேர்தல் செலவின கண்காணிப்புக் குழுக்களில், பறக்கும் படை குழுக்கள் (Flying Squad Team)- 18, நிலையான கண்காணிப்பு குழுக்கள் (Static Surveilance Team)- 18, வீடியோ சர்வேலன்ஸ் குழு (Video surveillance Team)- 6, மற்றும் காவல் துறையினை சார்ந்த 108 காவலர்கள் (Police Officials for teams) உட்பட மொத்தம் 567 தேர்தல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு அடிப்படை பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளது.
இந்த பயிற்சியில் வாக்குச்சாவடி மையங்களில் உள்ள அடிப்படை வசதிகள், பதற்றமான வாக்குச்சாவடிகளை கண்டறிதல், எலக்ட்ரானிக் வாக்குப்பதிவு இயந்திரங்களை கையாளுதல், தேர்தல் நாளன்று மேற்கொள்ளப்படவேண்டிய நடவடிக்கைகள் ஆகியவை குறித்த பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. தேர்தல் கமிஷன் அறிவுரைப்படி மேலும் பயிற்சிகள் வழங்கப்படும் என்று கூறினார். இக்கூட்டத்தில் டிஆர்டிஏ திட்ட இயக்குநர் வடிவேல், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) சிவக்குமார் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.