தஞ்சாவூர் வேலைவாய்ப்பு முகாமில் 543 நபர்களுக்கு பணி நியமன ஆணை 

தஞ்சாவூர் வேலைவாய்ப்பு முகாமில், 12 மாற்றுத் திறனாளிகள் உட்பட 543 நபர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.

Update: 2023-12-10 11:25 GMT

பணி நியமன ஆணைகளை வழங்கிய ஆட்சியர்

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

தஞ்சாவூர் மாவட்டம், வல்லம் பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில், மாவட்ட நிர்வாகம் மற்றும் வேலைவாய்ப்பு அலுவலகம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நலத்துறை சார்பில், முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் மாவட்ட ஆட்சித் தலைவர் தீபக் ஜேக்கப் தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது .

இந்நிகழ்ச்சியில், திருவையாறு சட்டமன்ற உறுப்பினர் துரை. சந்திரசேகரன்,  தஞ்சாவூர் மாநகராட்சி மேயர் சண். ராமநாதன், மாவட்ட ஊராட்சித் தலைவர் உஷா புண்ணியமூர்த்தி, துணை மேயர் மரு.அஞ்சுகம் பூபதி, துணைவேந்தர் எஸ்.வேலுச்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இம்முகாமில் மாவட்ட ஆட்சித் தலைவர் பேசியதாவது: டாக்டர் கலைஞர் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு, கடந்த ஆக.12 அன்று தஞ்சாவூர் சரபோஜி அரசு கலை கல்லூரியிலும், அக்.7 அன்று கும்பகோணம் சாஸ்த்ரா பல்கலைக்கழகத்திலும்  நடைபெற்றுள்ள சிறப்பு தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் 228 நிறுவனங்கள் கலந்து கொண்டனர். இம்முகாம்களில், 5, 278 பேர்  கலந்து கொண்டு 718 பேர் பணி நியமனங்களைப் பெற்றுள்ளனர்.  தற்போது நடைபெறும் வேலைவாய்ப்பு முகாமில், முன்னணி நிறுவனங்கள்  உட்பட 147 க்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் மற்றும் திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கும் நிறுவனங்கள் கலந்து கொண்டனர்.  இம்முகாமில், மொத்தம் 3,257க்கும் மேற்பட்ட நபர்கள் கலந்து கொண்டனர். இதில், 12 மாற்றுத் திறனாளிகள் உட்பட 543 நபர்களுக்கு பணிநியமன ஆணைகள் வழங்கப்பட்டன. 522 நபர்கள் இரண்டாம் கட்ட தேர்விற்கும் 73 நபர்கள் திறன் பயிற்சிக்கும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.  தஞ்சாவூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் கடந்த மாதம் வரை 2,46,933 வேலைநாடுநர்கள் பதிவு செய்துள்ளனர். இதில் 1,35,725 பெண்கள், 1,11,208  ஆண் பதிவுதாரர்கள் ஆவர்" என்றார்.  இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் தெ.தியாகராஜன், வருவாய் கோட்டாட்சியர் இலக்கியா, பெரியார் மணியம்மை பல்கலைக்கழக பதிவாளர் ஸ்ரீவித்யா, மகளிர் திட்டம் திட்ட அலுவலர் எஸ்.சாந்தி, மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகம் உதவி இயக்குநர் கா.பரமேஸ்வரி, மாவட்ட ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின நலத்துறை அலுவலர் முத்துகிருஷ்ணன், தொழிலாளர் நலத்துறை உதவி ஆணையர் கமலா மற்றும் ஏராளமானோர்  கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News