அரசிராமணி பத்திரகாளியம்மன் கோயில் தீமிதி திருவிழா

சங்ககிரி அருகே அரசிராமணி பத்திரகாளியம்மன் கோயில் தீமிதி திருவிழா நடந்தது.;

Update: 2024-03-01 09:33 GMT

சேலம் மாவட்டம், சங்ககிரி அருகேயுள்ள ஸ்ரீ பத்திரகாளியம்மன் கோயில் மாசி மாத தீமிதி திருவிழாவில் அம்மன் வேடமிட்டும், அலகு குத்தியும் திரளான பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். சங்ககிரி வட்டத்திற்குட்பட்ட அரசிராமணி குள்ளம்பட்டி ஏரிக்கரை பகுதியில் அமைந்துள்ள மிகவும் பழைமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளியம்மன் கோயில் தீமிதி திருவிழா கடந்த 15 நாட்களுக்கு முன்பு பூச்சாட்டுதலுடன் தொடங்கியது.

அதனைத் தொடர்ந்து தினந்தோறும் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று வந்தது. இந்நிலையில் விரதமிருந்த பக்தர்கள் இன்று ஏரிக்கரை பகுதியில் மஞ்சள் நீராடி பல்வேறு அலகு குத்தியும், அம்மன் போல் வேடமிட்டு ஊர்வலமாக கோவிலை சுற்றி வந்து கோயில் முன்பு அமைக்கப்பட்ட குண்டத்தில் சிறப்பு பூஜைகள் செய்து மலர்களை தூவி முதலில் பூசாரி தீ மிதித்து தொடங்கி வைத்தார்.

அதனைத் தொடர்ந்து பூங்கரகம் எடுத்தும், குழந்தைகள், பெண்கள், பெரியவர் வரை நீண்ட வரிசையில் காத்திருந்து திரளான பக்தர்கள் தீ மிதித்து தங்களது நேர்த்திக் கடன் செலுத்தினர். இதனைத்தொடர்ந்து கோயில் முன்பு பெண்கள் பொங்கல் வைத்து ஆடு, கோழிகளை பலியட்டுஅருள்மிகு ஸ்ரீ பத்திரகாளியம்மனை வழிபட்டு சென்றனர்.

Tags:    

Similar News