மேல்முறையீட்டு மனுவுக்கு வாதிட மாஜி டி.ஜி.பி. தரப்புக்கு அவகாசம்
பெண் ஐ.பி.எஸ். அதிகாரி ஒருவருக்கு அப்போதைய சிறப்பு டி.ஜி.பி.யாக இருந்த ராஜேஷ்தாஸ், பாலியல் தொல்லை அளித்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக பெண் அதிகாரி அளித்த புகாரின்பேரில் முன்னாள் சிறப்பு டி.ஜி.பி. ராஜேஷ்தாஸ் மற்றும் செங்கல்பட்டு மாவட்ட முன்னாள் போலீஸ் சூப்பிரண்டு ஆகியோர் மீது விழுப்புரம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர், இவ்வழக்கு விசாரணை விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில், இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் சிறப்பு டி.ஜி.பி. ராஜேஷ்தாசுக்கு 3 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.20 ஆயிரத்து 500 அபராதமும், செங்கல்பட்டு முன்னாள் போலீஸ் சூப்பிரண்டுக்கு ரூ.500 அபராதமும் விதிக்கப்பட்டு கடந்த ஜூன் மாதம் 16-ந் தேதியன்று தீர்ப்பு கூறப்பட்டது. இந்த தீர்ப்பை எதிர்த்து இருவரும், விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுதாக்கல் செய்தனர். முன்னாள் சிறப்பு டி.ஜி.பி. ராஜேஷ்தாஸ் தரப்பு வக்கீல்கள், இம் மேல்முறையீடு தொடர்பாக வாதிட ஐகோர்ட்டு மூலமாக காலஅவகாசம் கேட்டனர். இந்நிலையில் இம்மேல்முறையீடு தொடர்பான மனு விழுப்புரம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. இதையடுத்து இம்மனுவை விசாரித்த நீதிபதி (பொறுப்பு) வெங்கடேசன், மேல்முறையீட்டு மனுவுக்கு வாதிட முன்னாள் சிறப்பு டி.ஜி.பி. தரப்புக்கு மேலும் அவகாசம் வழங்கி, இம்மனு மீதான விசாரணையை அடுத்த மாதம் (டிசம்பர்) 18-ந் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.