சாயல்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை

சாயல்குடியில் செயல்பட்டு வரும் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தற்போது மூட்டு அறுவை சிகிச்சையும் செய்யப்படுவதாக வட்டார மருத்துவ அதிகாரி டாக்டர் சரவணன் தெரிவித்துள்ளார்.

Update: 2024-06-25 04:55 GMT

மருத்துவ குழுவினர்

 தமிழகத்திலேயே மகப்பேறு மருத்துவத்தில் ஐ.எஸ்.ஒ தரச்சான்று பெற்ற அரசு மருத்துவமனையான இங்கு மூட்டு அறுவை சிகிச்சை செய்வது தனிச்சிறப்பாகும். இதுகுறித்து டாக்டர் சரவணன் கூறும்போது, "மூட்டு வலியால் ஏற்படும் உபாதைகளுக்கான சிகிச்சை பெற பெரும்பாலும் பெருநகரங்களில் உள்ள மருத்துவமனைகளை நாட வேண்டிய சூழல் இருந்து வந்தது. சில நேரங்களில் தனியார் மருத்துவமனைகளில் பெரும் பொருட்செலவில் சிகிச்சை பெற வேண்டியிருந்தது.

நமது சாயல்குடியை பொறுத்தமட்டில் சுமார் 200க்கும் மேற்பட்ட சுற்றுப்புற கிராமங்களில் கடுமையாக உழைக்கும் விவசாய கூலித்தொழிலாளர் பலரும் மூட்டு வலி, மூட்டு தேய்மானம் உள்ளிட்ட உபாதைகளால் சிரமப்படுவதை பார்க்க முடிந்தது. ஆகவே பெருநகரங்களுக்கு இணையாக நமது சாயல்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்திட வேண்டும் என தமிழக அரசுக்கும், சுகாதாரத்துறைக்கும் தொடர்ந்து கோரிக்கை வைத்து தற்போது அது சாத்தியமாயிற்று.ஆகவே தமிழக அரசுக்கு இந்த பகுதி மக்களின் சார்பாக நன்றி என கூறினார்.

வாகன போக்குவரத்து அதிகமுள்ள பகுதியான இங்கு தவிர்க்க முடியாத விபத்துக்கள் நடைபெற்று சாயல்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி சிகிச்சையளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக தொலைதூரமான இராமநாதபுரம், தூத்துக்குடி, மதுரை போன்ற இடங்களுக்கு அனுப்பப்படுவதால் சில நேரங்களில் உயிரிழப்பு தவிர்க்க முடியாததாகிறது. ஆகவே சாயல்குடி அரசு மருத்துவமனையில் தலைக்காய சிகிச்சைக்கான சிறப்பு பிரிவு சேவை துவங்கப்பட்டால் பல உயிரிழப்புகளை தவிர்க்கலாம் என கருத்து தெரிவிக்கும் சமூக ஆர்வலர்கள், மூட்டு மாற்று அறுவை சிகிச்சை சிறப்பு பிரிவை சாயல்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டுவந்த தமிழக அரசுக்கும், கடலாடி வட்டார மருத்துவ அதிகாரி டாக்டர் சரவணன் மற்றும் மருத்துவ குழுவினர்களுக்கும் நன்றி தெரிவித்தனர்.

Tags:    

Similar News