பொன்னமராவதி கோயில்களில் ஆருத்ரா தரிசன விழா
பொன்னமராவதி வட்டார சிவாலயங்களில் பௌர்ணமி மார்கழி திருவாதிரை நாளையொட்டி ஆருத்ரா தரிசன விழா நடைபெற்றது.
பொன்னமராவதி ஆவுடையநாயகி சமேத சோழீசுவரர் கோயிலில் நடைபெற்ற விழாவின் தொடக்கமாக நடராஜருக்கு பால், பழங்கள், பன்னீர் உள்ளிட்ட 16 வகையான அபிஷேகங்கள் செய்யப்பட்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. பூஜையை சிவாச்சாரியார்கள் சரவணன், ஹரி ஆகியோர் வழி நடத்தினர். தொடர்ந்து ஓய்வுபெற்ற ஆசிரியர் திருநாவுக்கரசு, தமிழாசிரியர் சிஎஸ். முருகேசன் ஆகியோர் திருவெம்பாவை பாடல்கள் படிக்க, ஒவ்வொரு பாடலுக்கும் அர்ச்சனை செய்யப்பட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. விழாவில் சுற்றுவட்டார பொதுமக்கள் பங்கேற்று வழிபட்டனர். விழாவில் பங்கேற்ற பக்தர்களுக்கு பிரசாதமாக களி வழங்கப்பட்டது.
இதேபோல், வேந்தன்பட்டி நெய் நந்தீஸ்வரர் கோயில், புதுப்பட்டி புவனேஸ்வரி பூலோகநாதர் உடனாய கோயில், திருக்களம்பூர் கதலிவனேஸ்வரர் கோயில் உள்ளிட்ட கோயில்களில் நடைபெற்ற ஆருத்ரா தரிசன விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.