ரயில் முன் பாய்ந்து தற்கொலை - அடையாளம் காணப்பட்ட அசாம் வாலிபர்
ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டவர் அசாம் மாநிலத்தை சேர்ந்தவர் என அடையாளம் தெரியவந்தது
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் உள்ள 4 வது பிளாட்பாரத்தில் கடந்த மூன்றாம் தேதி நின்று கொண்டிருந்த வாலிபர் ஒருவர் திடீரென ரயில் தண்டவாள பாதையில் இறங்கி தானாபூரிலிருந்து கர்நாடக மாநிலம் பெங்களூர் செல்லும் சங்கமித்ரா எக்ஸ்பிரஸ் ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். பின்னர் இது குறித்து தகவல் அறிந்த ரயில் நிலைய அதிகாரி ராஜன் ஜோலார்பேட்டை ரயில்வே காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் ரயில்வே சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் கண்ணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இறந்தவரின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இறந்தவர் யார் எந்த ஊரை சேர்ந்தவர் என்பது குறித்து ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர் இந்த நிலையில் இறந்தவர் அசாம் மாநிலம், கர்பி அங்லாங் மாவட்டத்தை சேர்ந்த பித்து ஜித் என்பவரின் பவான்ஜித் (28) என்பதும் இவர் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு தனது சொந்த ஊரான அசாம் மாநிலத்தில் இருந்து கேரள மாநிலத்திற்கு கூலி வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு வந்தவர் ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் இறங்கியுள்ளார். பின்னர் ஏதோ மனக்கவலையில் இருந்தவர் திடீரென சங்கமித்ரா ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.