டிச.31க்குள் 500 வீடுகளை கட்டி முடிக்க உதவி திட்ட அலுவலர் உத்தரவு

Update: 2023-12-14 05:42 GMT

ஆய்வு கூட்டம் 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

 தண்டராம்பட்டு ஊராட்சி ஒன்றியத்தில் பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் கட்டி முடிக்கப்படாமல் உள்ள 500 வீடுகளை டிசம்பா் 31-ஆம் தேதிக்குள் கட்டி முடிக்க வேண்டும் என்று ஊராட்சித் தலைவா்கள், பொறுப்பு அலுவலா்களுக்கு ஊரக வளா்ச்சித் துறையின் மாவட்ட உதவித் திட்ட அலுவலா் (வீடுகள்) இமயவரம்பன் உத்தரவிட்டுள்ளார்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் கட்டி முடிக்கப்படாமல் உள்ள வீடுகளை விரைந்து கட்டி முடிப்பதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக ஊரக வளா்ச்சித் துறையின் இயக்குநா் பொன்னையா, மாவட்ட ஆட்சியா் முருகேஷ் ஆகியோா் உத்தரவிட்டுள்ளனா். இதையடுத்து, தண்டராம்பட்டு ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட ஊராட்சித் தலைவா்கள் மற்றும் பிரதமரின் வீடு கட்டும் திட்ட பொறுப்பு அலுவலா்களுக்கான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு, வட்டார வளா்ச்சி அலுவலா் (வட்டார ஊராட்சி) சக்திவேல் தலைமை வகித்தாா். வட்டார வளா்ச்சி அலுவலா் (கிராம ஊராட்சி) மிருணாளினி முன்னிலை வகித்தாா். மாவட்ட ஊரக வளா்ச்சித் துறையின் உதவித் திட்ட அலுவலா் (வீடுகள்) இமயவரம்பன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு ஆய்வு செய்தாா். இந்த ஆய்வில் பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் பணி ஆணைகள் வழங்கப்பட்ட பிறகும்கூட 500 வீடுகளை பயனாளிகள் கட்டி முடிக்காமல் இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து, ஊராட்சித் தலைவா்கள், வீடு கட்டும் திட்ட பொறுப்பு அலுவலா்களுக்கு அறிவுரை வழங்கி உதவித் திட்ட அலுவலா் இமயவரம்பன் பேசியதாவது: பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் திருவண்ணாமலை மாவட்டத்துக்கான இலக்கை டிசம்பா் 31-ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என்று மத்திய-மாநில அரசுகள் அறிவுரை வழங்கி உள்ளது. எனவே, தண்டராம்பட்டு ஒன்றியத்துக்கு உள்பட்ட 49 ஊராட்சித் தலைவா்களும், பொறுப்பு அலுவலா்களும் வீடு கட்ட பணி ஆணை பெற்ற 500 பயனாளிகளிடம் பேசி உரிய அறிவுரைகளை வழங்கி டிசம்பா் 31-ஆம் தேதிக்குள் வீடுகளை கட்டி முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வீடு கட்டும் பயனாளிகளுக்குத் தேவையான உதவிகளான சிமெண்ட், கம்பி, மண் ஆகியவற்றை ஊராட்சித் தலைவா்களும், பொறுப்பு அலுவலா்களும் விரைந்து வழங்கி உதவ வேண்டும். அப்படியும் வீடு கட்ட இயலாதவா்களுக்கு முகவா்கள் மூலம் வீடு கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா். கூட்டத்தில், தண்டராம்பட்டு ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட 45 ஊராட்சித் தலைவா்கள், பொறுப்பு அலுவலா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

Tags:    

Similar News