திருத்தணி அருகே ஏ.டி.எம்மில் கொள்ளை முயற்சி - இருவர் கைது.
திருத்தணி அடுத்த கே.ஜி.கண்டிகையில் நொச்சிலி செல்லும் சாலையோரம் யூனியன் வங்கியின் ஏ.டி.எம்..இயந்திரம் செயல் பட்டு வருகிறது. இந்நிலையில், கடந்த, 2ம் தேதி அதிகாலையில் மர்ம நபர் ஒருவர் ஹெல்மேட் அணிந்து ஏ.டி.எம்.,மையத்தில் புகுந்து, ஏ.டி.எம்., இயந்திரத்தை உடைத்தார். பின் பணம் வைக்கும் இடத்தையும் உடைக்க முயற்சித்தவர் முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றார். இச்சம்பவம் குறித்து திருத்தணி போலீசார் வழக்கு பதிந்து அங்குள்ள கண்காணிப்பு கேமிராவில் பதிவான காட்சிகள் வைத்து மர்ம நபரை தேடி வந்தனர். மேலும் திருத்தணி டி.எஸ்.பி.,விக்னேஷ் தலைமையிலான தனிப்படை எஸ்.ஐ.,க்கள் குமார் மற்றும் ராக்கிகுமாரி ஆகியோர் மர்ம நபரை தேடி வந்தனர். இந்நிலையில் நேற்று ஏ.டி.எம்., இயந்திரத்தை உடைத்த, 16 வயது சிறுவனையும், அவருக்கு உதவியாக இருந்த வாலிபரையும் போலீசார் கைது செய்தனர். போலீஸ் விசாரணையில், ஏ.டி.எம்., இயந்திரம் உடைத்தவர் திருத்தணி ஒன்றியம் வி.சி.ஆர். கண்டிகை கிராமத்தைச் சேர்ந்த, 16 வயது சிறுவன் என்பதும், அவருக்கு உதவியாக செயல்பட்டவர் திருத்தணி ஒன்றியம் தாடூர் கிராமத்தை சேர்ந்த கஜேந்திரன் மகன் குருபிரகாஷ்,26 என்றும், தெரிய வந்தது. இதை தொடர்ந்து 16 வயது சிறுவனை திருவள்ளூரில் உள்ள சீர்திருத்தப் பள்ளியில் ஒப்படைத்தனர். குருபிரகாஷை கைது செய்து திருத்தணி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். திருட்டு சம்பவம் நடந்த, 48 மணி நேரத்தில் குற்றவாளிகளை திருத்தணி போலீசார் கண்டுபிடித்து கைது செய்தனர் என்பது குறிப்பிடதக்கது.