கான்டிராக்டரை தாக்கி பணம் பறிப்பு - 2 பேர் கைது.
குமரி மாவட்டம் தக்கலை அருகே உள்ள பனங்குழி கப்பியறை பகுதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன் (53). இவர் கேரளாவில் கட்டிட கான்டிராக்டர் தொழில் செய்து வருகிறார். சம்பவ தினத்தன்று அவர் கேரளாவில் இருந்து தக்கலைக்கு வந்தார். இரவு 7 மணியளவில் திருவிதாங்கோடு பகுதியில் உள்ள அமராவதி குளத்தின் வழியாக சுப்பிரமணியன் நடந்து சென்றார்.
அப்போது மோட்டார் சைக்கிளில் 2 பேர் அங்கு வந்தனர். அவர்கள், சுப்பிரமணியனை வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி உள்ளனர். பின்னர் அவரை தாக்கிவிட்டு ரூ.25 ஆயிரத்தை பறித்து ஓடி விட்டனர். தாக்குதலில் காயம் அடைந்த சுப்பிரமணியன், சிகிச்சைக்காக தக்கலை அரசு ஆஸ்பத்திரியில் சேர்ந்துள்ளார். தாக்குதல் மற்றும் வழிப்பறி குறித்து தக்கலை போலீசில் சுப்பிரமணியன் புகார் செய்தார்.
இந்த நிலையில் அதே தினம் தக்கலை போலீசார், திருவிதாங்கோடு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது மோட்டார் சைக்கிளில் 2 பேர் வந்துள்ளனர். போலீசாரை கண்டதும் தப்ப முயன்ற 2 பேரையும் மடக்கி பிடித்தனர். தொடர்ந்து 2 பேரையும் போலீஸ் நிலையம் கொண்டு சென்று விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் காண்டிராக்டர் சுப்பிரமணியனை தாக்கி பணம் பறித்தவர்கள் என்பது தெரியவந்தது.
விசாரணையில் அவர்களது பெயர் திருவிதாங்கோடு முகமது சார்ஜின் (28), வேர்க்கிளம்பி தாணிவிளை பெலிக்ஸ் (24) என தெரியவந்தது.இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து இருவரையும் கைது செய்தனர்.