5 மாத ஆண் குழந்தையை கடத்த முயற்சி: 2 மணி நேரத்தில் மீட்ட போலீசார்
பூதலுார் ரயில்வே ஸ்டேஷனில்காணாமல் போன ஆந்திரா தம்பதியின் 5 மாத ஆண் குழந்தையை 2 மணி நேரத்தில் போலீசார் மீட்டனர்,
தஞ்சாவூர் மாவட்டம், பூதலுார் ரயில்வே ஸ்டேஷனில், ஆந்திராவைச் சேர்ந்த திலீப் (26), அவரது மனைவி ஷோபா (21), இவர்களது ஐந்து மாத ஆண் குழந்தை மணிகண்டா ஆகியோர் தங்கியிருந்து இவர்கள் ரயிலில் கீ - செயின் விற்பனை செய்து வருகின்றனர். இந்நிலையில், திங்கள்கிழமை இரவு வழக்கம் போல், ரயில்வே ஸ்டேஷனில் பிளாட்பார்மில் தூங்கிக்கொண்டு இருந்தனர்
. அப்போது செவ்வாய்க்கிழமை அதிகாலை சுமார் 3:30 மணிக்கு அருகில் படுக்க வைத்திருந்த குழந்தையை காணததால் ஷோபா, திலீப் இருவரும் அதிர்ச்சியடைந்தனர். பிறகு ரயில்வே ஸ்டேஷன் பகுதி முழுவதும் தேடியுள்ளனர். ஆனால் குழந்தை கிடைக்காதால் உடனடியாக, பூதலூர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த காவல் ஆய்வாளர் சிவசுப்பிரமணியன் தலைமையில், சரவணன், தனசேகரன், தியானேஸ்வரன் உள்ளிட்ட காவல்துறையினர் பல இடங்களில் தேடினர்.
அப்போது, ரயில்வே ஸ்டேஷனிலிருந்து சுமார் அரை கிலோ மீட்டர் துாரத்தில் எந்தவித பாதிப்பும் இன்றி குழந்தை கிடந்துள்ளது. உடனடியாக அந்த குழந்தையை மீட்டு அவர்களது பெற்றோரிடம் திங்கள்கிழமை காலை 6 மணிக்கு ஒப்படைத்தனர். விசாரணையில், குழந்தையை மர்ம கும்பல் கடத்த முயன்றுள்ளனர். அப்போது குழந்தை அழுத சூழலில், குழந்தையை கோழிக் கழிவுகள் கொட்டப்படும் இடத்தில் வீசி விட்டு சென்றுள்ளனர். இதை அதிகாலை வாக்கிங் சென்றவர்கள் பார்த்து தகவல் அளித்தனர். சுமார் இரண்டு மணி நேரத்தில் குழந்தையை மீட்ட காவல்துறையினருக்கு பெற்றோர் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தனர்.