போட்டித் தேர்வு பயிற்சி மையத்தில் பரிசளிப்பு விழா
பேராவூரணி திருவள்ளுவர் கல்விக் கழக போட்டித் தேர்வு பயிற்சி மையத்தில் பாராட்டு மற்றும் பரிசளிப்பு விழா நடைபெற்றது.
பேராவூரணி திருவள்ளுவர் கல்விக் கழகம் சார்பில் போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி மையம் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்று வருகிறது. பயிற்சி மையத்தில் படிக்கும் மாணவர்களுக்கு நடத்தப்பட்ட மாதிரி தேர்வில் அதிக மதிப்பெண்கள் எடுத்தவர்களுக்கு பாராட்டு மற்றும் பரிசளிப்பு விழா பயிற்சி மைய ஆசிரியர் சந்தோஷ் தலைமையில், சமூக ஆர்வலர் மெய்ச்சுடர் வெங்கடேசன், பயிற்சி மைய பொறுப்பாளர் பழனிவேல் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.
விழாவில் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கிக் கிளையின் முதுநிலை மேலாளர் இராகவன் சூரியேந்திரன் பரிசு வழங்கி பேசியது, கல்வி ஒன்று தான் நாம் உயர்வதற்கான ஒரே வழி. கல்வியால் எந்த உயரத்தையும் தொட முடியும். பயிற்சி மையத்தில் அதிக அளவில் மாணவிகள் உள்ளனர். நீங்கள் அனைவரும் அரசு பணி வாய்ப்புகளை பெற வேண்டும். ஒரு பெண் பெறக்கூடிய அரசுப்பணி வாய்ப்பு அவருக்கு கிடைக்கும் மிகப்பெரிய அதிகாரமாகும்.
பெண்களின் கையில் கிடைக்கும் அதிகாரம் சமூகத்தில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும். இந்த போட்டித் தேர்வு மையம் உங்களுக்கு கிடைத்த நல்ல வாய்ப்பு. நாங்கள் படிக்கின்ற காலத்தில் இது போன்ற வாய்ப்பு எங்களுக்கு கிடைக்கவில்லை. ஒரு சிறிய ஊரில் எளிய மாணவர்களுக்கு இந்த வாய்ப்பை இங்குள்ள தன்னார்வலர்கள் ஏற்படுத்தி கொடுத்துள்ளார்கள். இங்கு உங்களுக்கு வழிகாட்டக்கூடிய அரசு அதிகாரிகள் தங்களின் விடுமுறை காலத்தை தியாகம் செய்து உங்களுக்காக வகுப்புகளை நடத்துகிறார்கள். தங்களைப்போல நீங்களும் அரசு அதிகாரிகளாக வரவேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தில் அவர்களது நோக்கம் நிறைவேறவும், நீங்கள் வாழ்வில் முன்னேறவும் கடும் முயற்சியும் உழைப்பும் உங்களுக்கு வெற்றியைத் தரும்" என்று பேசினார் . நிகழ்ச்சியில் பயிற்சி மைய ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர் .