பேராவூரணியில் விழிப்புணர்வு மாரத்தான்
பேராவூரணியில் உடல் ஆரோக்கியம், விளையாட்டு, கல்வியை வலியுறுத்தி விழிப்புணர்வு மாரத்தான் நடைபெற்றது.
Update: 2024-02-18 03:02 GMT
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி பேரூராட்சி ஆதனூர் கிராமம் தேரடித் திடலில், ஆதனூர் ஸ்போர்ட்ஸ் கிளப், வீரக்குறிச்சி மேக்ஸ் அருள் பவுண்டேஷன் இணைந்து, உடல் ஆரோக்கியம், விளையாட்டு, கல்வி விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டப் போட்டி சனிக்கிழமை காலை நடைபெற்றது. 19 வயதிற்கு உட்பட்ட சிறுவர், சிறுமிகளுக்கு 10 கிலோமீட்டர் தூரமும், 14 வயதிற்குட்பட்ட சிறுவர், சிறுமிகளுக்கு 5 கிலோ மீட்டர் தூரமும் இலக்காக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. நான்கு பிரிவுகளாக நடத்தப்பட்ட இப்போட்டியில் நூற்றுக்கணக்கான சிறுவர், சிறுமிகள் கலந்து கொண்டனர். போட்டியில் முதல் நான்கு இடம் பெற்றவர்களுக்கு பரிசு, சுழற் கோப்பை வழங்கப்பட்டது. பின்னர் வந்த 10 நபர்களுக்கு சிறப்பு பரிசு வழங்கப்பட்டது. மொத்தம் ரூ.1 லட்சம் மதிப்பிலான பரிசுகள் வழங்கப்பட்டன. போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது. பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் அசோக்குமார், மேக்ஸ் அருள் பவுண்டேஷன் நிறுவனர் அருள்சூசை, காவல் உதவி ஆய்வாளர் புகழேந்தி ஆகியோர் கலந்து கொண்டு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கி வாழ்த்திப் பேசினர். இதில், கிராமத்தினர், விளையாட்டு ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.