காஞ்சிபுரத்தில் சமரச மையம் குறித்த விழிப்புணர்வு பேரணி
காஞ்சிபுரம் ஒருங்கிணைந்த நீதிமன்றங்கள் சார்பில் சமரச மையங்கள் குறித்த விழிப்புணர்வு பேரணியை காஞ்சிபுரம் மாவட்ட நீதிபதி யு.செம்மல் துவக்கி வைத்தார்
காஞ்சிபுரம் ஒருங்கிணைந்த நீதிமன்றங்கள் சார்பில் சமரச மையங்கள் குறித்த விழிப்புணர்வு பேரணியை காஞ்சிபுரம் மாவட்ட நீதிபதி யு.செம்மல் துவக்கி வைக்க, நீதிபதிகள், வழக்கறிஞர்கள் என பலர் கலந்து கொண்டனர். இந்தியா முழுவதும் உச்ச நீதிமன்றம் வழிகாட்டுதல் படி தேங்கி உள்ள சிறு வழக்குகளை முடித்து வைப்பதற்காக உயர்நீதிமன்றம் மற்றும் மாவட்ட நீதிமன்றங்களில் சமரச மையங்கள் செயல்பட்டு வருகிறது. நீதிமன்றங்களில் நிலுவையில் இருக்கும் வழக்குகளை சமரசம் மையத்திற்கு அனுப்பி இரு தரப்பினருக்கும் எந்தவித இழப்பும் இல்லாமல் சமரசத்தின் மூலம் தீர்வு காணப்பட்டு வருகிறது.
இதனால் வழக்காடிகளுக்கான இரு தரப்பு உறவுகளும் மேம்பட வழி செய்கிறது. மேலும் இந்த சமரசம் மையத்தின் மூலம் மேற்கொள்ளப்படும் நிகழ்வுகளுக்கு பிறகு மேல்முறையீடு இல்லை எனவும் இதற்காக செலுத்தப்பட்ட நீதிமன்ற கட்டணங்கள் திருப்பி அளிக்கப்படுகிறது . இந்த வழிகாட்டுதல் நெறிமுறகைளை பின்பற்றி அனைத்து மாவட்டங்களிலும் சமரச மையங்கள் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் பொது மக்களுக்கு இது குறித்த விழிப்புணர்வு அளிக்கும் வகையில் விழிப்புணர்வு செய்ய சென்னை உயர்நீதிமன்றம், மாவட்ட நீதிமன்றங்களுக்கு அறிவுறுத்தியது.
அவ்வகையில் காஞ்சிபுரம் தாலுக்கா அலுவலகம் வளாகத்தில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் மாவட்ட நீதிபதி யு.செம்மல் தலைமையில் சமரச விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பேரணியை துவக்கி வைத்த மாவட்ட நீதிபதி செம்மல், உடன் பணியாற்றும் நீதிபதிகள் மற்றும் வழக்கறிஞர்களுடன் பேரணியாக சென்று பொதுமக்களுக்கு சமரச மையங்கள் மூலம் கிடைக்கும் நன்மைகள் குறித்த துண்டு பிரசுரங்களை வழங்கினர். இந்நிகழ்வில் காஞ்சிபுரம் நீதிமன்ற அரசு வழக்கறிஞர்கள், வழக்கறிஞர் சங்கங்களின் நிர்வாகிகள், வழக்கறிஞர்கள் என பலர் கலந்து கொண்டனர்.