மண்டல பூஜையை முன்னிட்டு ஐயப்ப சுவாமி ஊர்வலம்
சிவகங்கையில் மண்டல பூஜையை முன்னிட்டு நடந்த ஊர்வலத்தில் ஐயப்பன் சுவாமி யானை வாகனத்தில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
சிவகங்கை மாவட்டம், சிவகங்கை நகர் மையப்பகுதியில் அமைந்துள்ள புராண சிறப்பமிக்க பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ விசாலாட்சி அம்பாள் சமேத ஸ்ரீ காசி விஸ்வநாதர் திருக்கோவிலில் தனி சன்னதி கொண்டு அருள் பாலிக்கும் ஸ்ரீ ஐயப்ப சுவாமிக்கு மண்டல பூஜை விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. விழாவை முன்னிட்டு உற்சவர் ஐயப்பன் சுவாமி யானை வாகனத்தில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
இவ்விழா கணபதி பூஜை உடன் துவங்கியது. விழா நாட்களில் மூலவர் ஐயப்ப சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஐயப்ப சுவாமி யானை வாகன பவனி நடைபெற்றது. முன்னதாக சர்வ அலங்காரத்தில் ஸ்ரீ உற்சவர் ஐயப்ப சுவாமி வண்ண பூக்களால் அலங்கரிக்கப்பட்ட யானை வாகனத்தில் எழுந்தருளினார். தொடர்ந்து சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று மகா தீப ஆராதனை காண்பிக்கப்பட்டன பின்னர் கோவில் யானை முன் செல்ல கேரளா பாரம்பரியமான நடன கலைஞர்கள் மற்றும் பல்வேறு தெய்வங்களின் வேடங்கள் அணிந்து பக்தர்கள் உடன் வந்தனர். ஐயப்ப சுவாமி செண்டை மேள வாத்தியங்களுடன் நகரின் முக்கிய வீதிகள் வழியாக பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்ரீ ஐயப்ப சுவாமிக்கு அர்ச்சனைகள் செய்து வழிபட்டனர்.