மல்லிப்பட்டினம் மீன் ஏலக்கூடத்தில் வெளிமாவட்ட மீன்களை விற்பனை செய்ய தடை

மல்லிப்பட்டினம் மீன்பிடி துறைமுகப் பகுதியில் வெளிமாவட்ட மீன்களை விற்பனை செய்ய தடைவிதிப்பது என தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

Update: 2023-10-29 14:45 GMT

கோப்பு படம்


இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

தஞ்சாவூர் மாவட்டம், மல்லிப்பட்டினம் மீன்பிடி துறைமுகப் பகுதியில் உள்ள மீன் ஏலக்கூடத்தில் சுகாதார காரணங்களினால் வெளிமாவட்ட மீன்களை கொண்டு வந்து விற்பனை செய்ய தடைவிதிப்பது என விசைப்படகு, நாட்டுப்படகு உரிமையாளர்கள் சங்கம்  தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.  மல்லிப்பட்டினம், கள்ளிவயல் தோட்டம் விசைப்படகு, நாட்டுப்படகு மீனவர் சங்கங்களின் அவசர ஆலோசனைக் கூட்டம்,  தமிழ்நாடு மீனவர் பேரவை மாவட்டச் செயலாளர் வடுகநாதன் தலைமையில் நடைபெற்றது. விசைப்படகு, நாட்டுப்படகு சங்க நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். 

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்,  "மல்லிப்பட்டினம் மீன்பிடி துறைமுகப் பகுதியில் உள்ள இரு பகுதிகளான மல்லிப்பட்டினம், கள்ளிவயல் தோட்டம் மீன் ஏலக்கூடத்தில், கடலிலிருந்து பிடித்து வந்து உடனடியாக விற்பனை செய்யும் மீன்களுக்கிடையே, வெளிமாவட்டங்களில் இருந்து ஏற்கனவே பிடிக்கப்பட்டு, பதப்படுத்தப்பட்ட, சுகாதாரமற்ற மீன்களை கொண்டுவந்து விற்பனை செய்வதால் சுகாதாரக் கேடும், நோய்த்தொற்று ஏற்படும் அபாயம் உள்ளதாலும், மல்லிப்பட்டினம் துறைமுக பகுதிகளில் பிடித்து வரும் மீன்கள் விலை குறைவாக விற்பனையாவதாலும்,

வெளிமாவட்ட மீன்களை விற்பனை செய்ய அனுமதிப்பதில்லை என்றும், மீறி விற்பனைக்கு கொண்டு வந்தால் மீன்வளம், சுகாதாரத் துறை, காவல் துறை மூலம் நடவடிக்கை எடுப்பதென்றும், காலை 8 மணியுடன் மீன் ஏலக்கூடத்தில் விற்பனை முடிந்து விடுவதால், அதற்கு பிறகு பிடித்து வரும் மீன்களை முறையான விலைக்கு விற்பனை செய்ய முடியாத நிலை உள்ளதால், மல்லிப்பட்டினம் கிழக்கு கடற்கரை சாலையில் மீன் ஏலக்கூடம் அமைத்து தர மீன்வளத்துறை மூலம் தமிழக அரசை கேட்டுக் கொண்டும்" தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.  இக்கூட்டத்தில் விசைப்படகு, நாட்டுப்படகு உரிமையாளர்கள், சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News