மணிமுத்தாறு அருவியில் சுற்றுலா பயணிகளுக்கு தடை
நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து நீர்வரத்து அதிகரித்திருப்பதால் மணிமுத்தாறு அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
Update: 2023-10-31 08:19 GMT
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் மேற்குத்தொடரச்சி மலையிலுள்ள பிரதான அருவியான மணிமுத்தாறு அருவி உள்ளது. இங்கு ஆண்டுதோறும் தண்ணீர் விழுவதால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் இங்கு வருகை தந்து குளித்து மகிழ்கின்றனர்.இந்த நிலையில் கடந்த சில நாட்களாக தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வரும் நிலையில் நேற்று மேற்குத்தொடர்ச்சி மலையில் பரவலாக கனமழை பெய்தது.குறிப்பாக மணிமுத்தாறு அருவிக்கு மேலே உள்ள மாஞ்சோலை,நாலுமுக்கு, ஊத்து, காக்காச்சி உள்ளிட்ட தேயிலை தோட்ட பகுதியில் கனமழை பெய்துள்ளது. அதிகபட்சமாக மாஞ்சோலையில் 63 மிமீ மழையும் ,நாலுமுக்கு பகுதியில் 64 மில்லி மீட்டர் மழையும், ஊத்து பகுதியில் 51 மில்லி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.இதனால் மணிமுத்தாறு அருவிக்கான நீர்வரத்து அதிகரித்து அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் பாதுகாப்பு கருதி சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்க வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். மேலும் அருவியை பார்வையிட மட்டும் அனுமதி வழங்கியுள்ளனர், தொடர்ந்து வெள்ளப்பெருக்கு குறைந்தவுடன் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்படுவதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.