வாக்கு இயந்திர பாதுகாப்பு மையம் சுற்றி டிரோன் பறக்க தடை
குமரி மாவட்டத்தில் வாக்கு இயந்திர பாதுகாப்பு மையம் சுற்றி டிரோன் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிரும்பதாவது, இந்திய தேர்தல் ஆணையத்தால் 2024 மக்களவை தேர்தல் தொடர்பான அறிவிப்பு 16.03.2024 அன்று வெளியிடப்பட்டுள்ளது. தமிழ் நாட்டில் 39, கன்னியாகுமரி மக்களவை தொகுதிக்கான தேர்தல் மற்றும் 233, விளவங்கோடு இடைத்தேர்தல் 19.04.2024 வெள்ளிகிழமை அன்று நடைபெற்றது.
தேர்தல் நாளன்று வாக்குப்பதிவு செய்யப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக கோணம், பல்கலைக்கழக பொறியியல் கல்லூரியில் வைத்து சீல் வைக்கப்பட்டுள்ளது. இந்த கல்லூரியினை சுற்றி மூன்று அடுக்கு பாதுகாப்பு காவல்துறையினரால் மத்திய பாதுகாப்பு காவலர்களுடன் இணைந்து வழங்கப்பட்டு வருகிறது. மேலும், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள கல்லூரியினை சுற்றி பாதுகாப்பினை கருதி 2 கி.மீ சுற்றளவிற்கு சிவப்பு மண்டலமாக அறிவிக்கை செய்யப்படுகிறது.
இதனால் மேற்படி கல்லூரி வளாகத்தினை சுற்றி ஆள் இல்லா சிறிய ரக விமானம் / டிரோன்கள் பறக்க தடை செய்யப்படுகிறது. அவ்வாறு தடையினை மீறும் நபர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்ற விபரம் தெரிவிக்கப்படுகிறது. என அறிக்கையில் கூறியுள்ளார்.