திற்பரப்பு அருவியில் குளிக்க 2-ம் நாளாக தடை
Update: 2023-11-20 06:45 GMT
குமரி மாவட்டம் முழுவதும் கடந்த 2 மாதமாக விட்டுவிட்டு பெய்த மழையின் காரணமாக குளுகுளு சீசன் நிலவுகிறது. இதற்கிடையில் மாவட்டத்தில் 2 நாட்கள் கன மழை பெய்யும் என்று சென்னை வானிலை மையம் எச்சரித்துள்ளது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு முதல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இடி-மின்னலுடன் கனமழை பெய்தது. நேற்றும் காலை முதல் மாவட்டம் முழுவதும் கன மழை கொட்டி தீர்த்தது. இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளானார்கள். இடைவிடாது கொட்டிய மழையின் காரணமாக சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன. ஆறுகளில் ஏற்பட்ட வெள்ள பெருக்கால் திற்பரப்பு அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருவதால் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். ஆனால் யாரையும் அருவியில் குளிக்க அனுமதிக்கவில்லை. இன்று 2-ம் நாளாக இந்த தடை நீடிக்கிற மலையோர பகுதியான பாலமோர் பகுதியிலும் மழை பெய்து வருவதால் அணைகளுக்கு வரக்கூடிய நீர்வரத்து அதிகரித்துள்ளது. பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்ததையடுத்து பொதுப்பணித் துறை அதிகாரிகள் அணையில் இருந்து கூடுதல் தண்ணீரை வெளியேற்றுவது தொடர்பாக ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்கள்.