சேலம் ரெயில் நிலையத்தில் காட்சி பொருளான பேட்டரி கார்

சேலம் ரெயில் நிலையத்தில் பேட்டரி கார் பழுதாகி இருப்பதால் வயதானவர்கள், மாற்றுத்திறனாளிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.

Update: 2024-02-09 02:17 GMT
பேட்டரி  கார் 

சேலம் ஜங்சன் ரெயில் நிலையம், ரெயில்வே கோட்டத்தின் தலைமையிடமாக திகழ்கிறது. அதுமட்டும் அல்லாமல் தமிழ்நாட்டில் உள்ள ரெயில் நிலையங்களில் அதிக வருவாய் தரக்கூடிய ரெயில்நிலையங்களில் இதுவும் ஒன்று. இங்கு 5 பிளாட்பாரங்கள் உள்ளன. தினமும் 100-க்கும் மேற்பட்ட ரெயில்கள் சேலம் சந்திப்பு ரெயில் நிலையத்துக்கு வந்து செல்கின்றன. அப்படி வரும் ரெயில்களில் இறங்கி ஏறுவோர் எண்ணிக்கை தினமும் பல ஆயிரத்தை தாண்டும். பயணிகளின் வசதிக்காக இந்த ரெயில் நிலையத்தில் குடிநீர், நடைமேடை, கழிப்பறை உள்ளிட்ட பல்வேறு வசதிகள் செய்யப்பட்டு இருக்கின்றன.

ஆனால் வயதானவர்கள், முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் ஒரு பிளாட்பாரத்தில் இருந்து மற்றொரு பிளாட்பாரத்துக்கு செல்ல சிரமப்படுகிறார்கள். அதற்காகவே பேட்டரி கார் ரெயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டு உள்ளது. அப்படி நிறுத்தப்பட்டுள்ள பேட்டரி கார், கடந்த ஒரு வாரமாக பழுதாகி கிடக்கிறது. அது பிளாட்பாரத்தில் எங்கோ ஒரு மூலையில் காட்சி பொருளாக நிற்பதாக கூறப்படுகிறது. பேட்டரி காரின் இந்த நிலையால் வயதானவர்கள், முதியவர்கள் ரெயிலில் இருந்து இறங்கி வேறு இடத்துக்கு செல்ல முடியாமல் கடும் அவதிக்கு ஆளாகி உள்ளனர். அதிக வருவாயை ஈட்டித்தரும் சேலம் ஜங்சன் ரெயில் நிலையம், பயணிகளின் அதுவும் குறிப்பாக வயதானவர்கள், முதியவர்களின் நலன் காக்கும் வகையில் அவர்கள் பயன்படுத்தும் பேட்டரி காரை உடனே சரிசெய்து கொடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பும் கோரிக்கையுமாக உள்ளது.

Tags:    

Similar News