ஏழை பெண்களுக்கு திருமண நிதியுதவியுடன் தாலிக்கு தங்கம் - அமைச்சர் மா.மதிவேந்தன் வழங்கினார்
தாலிக்கு தங்கம் திட்டத்தில் பயன் பெற்ற பயனாளிகள்
Update: 2024-02-10 10:05 GMT
ஏழை பெண்களுக்கு திருமண நிதியுதவியுடன் தாலிக்கு தங்கம் அமைச்சர் மா.மதிவேந்தன் வழங்கினார். நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் சார்பில் ஏழை பெண்களுக்கு திருமண நிதியுதவியுடன் தாலிக்கு தங்கம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் ச.உமா தலைமை தாங்கினார். திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் ஈ.ஆர்.ஈஸ்வரன், நகரமைப்பு மண்டல திட்டக்குழு உறுப்பினர் எஸ்.எம்.மதுரா செந்தில் ஆகியோர் முன்னிலை வகித்தனா். இந்நிகழ்வில் வனத்துறை அமைச்சர் மருத்துவர் மா.மதிவேந்தன் கலந்து கொண்டு 10 மற்றும் 12 ஆம் வகுப்பு கல்வி தகுதியுடைய 97 பெண்களுக்கு ரூ.24.25 இலட்சம் மதிப்பில் திருமண உதவித்தொகை, 776 கிராம் தங்கமும், பட்டம் மற்றும் பட்டயம் படிப்பு கல்வி தகுதியுடைய 239 பெண்களுக்கு ரூ.1.19 கோடி மதிப்பில் திருமண உதவித்தொகை என மொத்தம் 336 ஏழை பெண்களுக்கு ரூ.1.43 கோடி மதிப்பில் திருமண நிதியுதவியுடன், 2,688 கிராம் தாலிக்கு தங்கம் வழங்கி, சிறப்புரையாற்றினார். அப்போது அவா் பேசுகையில்... தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சியில் மகளிருக்கு இலவச பேருந்து பயணம், கலைஞர் மகளிர் உரிமை தொகை மாதம் ரூ. 1,000, பெண்கள் உயர்கல்வி பயில்வதை ஊக்குவிக்க புதுமைப்பெண் திட்டத்தில் ரூ.1000 என பெண்கள் மேம்பாட்டிற்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தப்பட்டு வருகிறார். பெண்கள் முன்னேறினால் தான் மாநிலம் முன்னேறும் என்பதை கருத்தில் கொண்டு மகளிரின் தொழில் மேம்பாட்டிற்காக மேலும் ரூ.30,000 கோடி கடனுதவி வழங்கப்படவுள்ளது என இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் அறிவித்துள்ளார். இதனை நல்ல முறையில் பயன்படுத்திக் கொண்டு தங்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என அமைச்சர் மா.மதிவேந்தன் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட சமூக நல அலுவலர் (பொறுப்பு) க.மோகனா உள்ளாட்சி பிரதிநிதிகள், துறை சார்ந்த அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.