கலைஞரின் கனவு இல்லம் திட்ட பயனாளிகள் தேர்வு: ஆட்சியர்

தூத்துக்குடி மாவட்டத்தில் கலைஞரின்  கனவு இல்லம் திட்ட பயனாளிகள் தேர்வு தொடர்பாக  ஆட்சியர்  தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடந்தது.;

Update: 2024-06-28 16:43 GMT

பயனாளிகள் தேர்வு 

தமிழக அரசின் ‘கனவு இல்லம்’ திட்டத்தில் சாத்தான்குளம், திருச்செந்தூர், ஆழ்வார்திருநகரி, உடன்குடி ஊராட்சி ஒன்றியங்களில் நடைபெறும் பயனாளிகள் தேர்வு குறித்த ஆய்வுக் கூட்டம், திருச்செந்தூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு தலைமை வகித்து ஆட்சியர் கோ. லட்சுமிபதி பேசியது,

குடிசை வீடுகளில் வசிப்போருக்கு ஆர்.சி.சி. கூரையுடன் கூடிய வீடுகளைத் கட்டித்தருவதுதான் இத்திட்டத்தின் முக்கிய நோக்கம்.  மனுக்களை அலுவலர்கள் முழுமையாக பரிசீலித்து, நேரடி கள ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். பட்டியலின மக்கள், மாற்றுத் திறனாளிகள், கணவரால் கைவிடப்படோர் இத்திட்டத்தில் விண்ணப்பித்தால் உடனடியாக பரிசீலித்து, தகுதி இருக்கும்பட்சத்தில் பயனாளிகளைப் பட்டியலில் சேர்க்க வேண்டும். ஏழ்மை நிலையிலுள்ளோர் விண்ணப்பித்து, தகுதி இருந்தும் ஆவணங்களிலோ, பட்டா மாறுதலிலோ, வருவாய்த் துறை சான்று உள்ளிட்ட காரணங்களால் தவிர்க்காமல் திருத்தங்கள் மேற்கொள்ள வழிவகை செய்து பயனாளிகளாக சேர்க்க வேண்டும்.

Advertisement

மக்கள் குறைதீர் கூட்டத்தில் இத்திட்டத்தில் அளிக்கப்படும் மனுக்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும். தகுதியான யாரும் விடுபடக் கூடாது. இத்திட்டத்தில் மனு ஏற்பா அல்லது தள்ளுபடியா என்பதற்கான காரணத்தை எழுத்துப்பூர்வ சான்றாக வழங்க வேண்டும். இத்திட்டத்தில் வருவாய்த் துறை, ஊரக வளர்ச்சி -ஊராட்சித் துறை அலுவலர்கள் முக்கியத்துவம் அளித்து ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்றார் . திருச்செந்தூர் கோட்டாட்சியர் சுகுமாறன், வட்டாட்சியர்கள் இசக்கி முருகேஸ்வரி (சாத்தான்குளம்), பாலசுந்தரம் (திருச்செந்தூர்), கோபால் (ஏரல்), வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சுரேஷ் (சாத்தான்குளம்), அன்றோ (திருச்செந்தூர்), ஜான்சிராணி (உடன்குடி), பாக்கியலீலா (ஆழ்வார்திருநகரி) உள்ளிட்ட அலுவலர்கள் பங்கேற்றனர். முன்னதாக, திருச்செந்தூர் ஊராட்சி ஒன்றியம், மேலத் திருச்செந்தூர் ஊராட்சி தளவாய்புரத்தில் மாற்றுத் திறன் குழந்தையுடன் வாடகை வீட்டில் வசித்துவரும் விமல் என்பவர் இலவச வீட்டுமனைப் பட்டா கேட்டு மனு அளித்திருந்தார்.

அவரை ஆட்சியர் நேரில் சந்தித்து இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கியதுடன், அவரை கனவு இல்லம் திட்ட பயனாளிகள் பட்டியலில் சேர்க்க அதிகாரிகளிடம் அறிவுறுத்தினார். தொடர்ந்து ஏரல் வட்டம், தென்திருப்பேரையில் உள்ள கடம்பாகுளம் மிகைநீர் செல்லும் மறுகால், கடம்பாகுளத்தின்கீழ் உள்ள 13 குளங்களுக்கு நீர் செல்லும் 8 தலைமதகுகளை ஆட்சியர் ஆய்வு செய்தார். கீழ் தாமிரவருணி, கோரம்பள்ளம் வடிநிலக் கோட்ட செயற்பொறியாளர் வசந்தி, உதவி செயற்பொறியாளர் ஆதிமூலம் ஆகியோர் உடனிருந்தனர்.

Tags:    

Similar News