நாலெட்ஜ் பொறியியல் கல்லூரியில் மாணவர்களுக்கு சைக்கிள் வடிவமைப்பு போட்டி
நாலெட்ஜ் பொறியியல் கல்லூரியில் மாணவர்களுக்கு சைக்கிள் வடிவமைப்பு போட்டிகள் நடைபெற்று வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.;
Update: 2024-03-02 07:12 GMT
நாலெட்ஜ் பொறியியல் கல்லூரி
சேலம் நாலெட்ஜ் பொறியியல் கல்லூரியில் எந்திரவியல் துறையும், சொசைட்டி ஆப் ஆட்டோமோட்டிவ் என்ஜினீயர்ஸ் (எஸ்.ஏ.இ.) தென்னக பிரிவும் இணைந்து மாணவர்களுக்கு சைக்கிள் வடிவமைப்பு போட்டியை கல்லூரி வளாகத்தில் நடத்தியது. தேசிய அளவிலான இந்த போட்டியில் பல்வேறு மாநிலங்களில் 28 கல்வி நிறுவனங்களில் இருந்து 230-க்கும் மேற்பட்ட பொறியியல் மாணவர்கள் பங்கேற்று தங்களது சைக்கிள் வடிவமைப்பு திறனை வெளிப்படுத்தினர். மாணவர்களால் வடிவமைக்கப்பட்ட சைக்கிள்களுக்கு பம்ப் டெஸ்ட், ஸ்லோ ஸ்பீடு, பிரேக் டெஸ்ட் போன்ற சோதனைகள் தொழில்நுட்ப வல்லுனர்களால் நடத்தப்பட்டு வெற்றியாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இதன் தொடக்க விழாவில் சிறப்பு அழைப்பாளராக டிஐ நிறுவனத்தின் உற்பத்தி துறையின் பொது மேலாளர் பி.வெங்கடேஸ்வரன் பங்கேற்று பேசினார். எஸ்.ஏ.இ. இந்தியா அமைப்பின் மூத்த துணைத்தலைவர் ஜி.நாகராஜன், டிவிசன் தலைவர் கே.விசாகவேல், ஆலோசகர் சண்முகம், எஸ்.ஏ.இ. தென்னக பிரிவின் தலைவர் ராஜேந்திரன், முன்னாள் தலைவர் ஆம்ஸ்ட்ராங், கல்லூரி எந்திரவியல் துறை தலைவர் பிரபாகரன், எஸ்.ஏ.இ. அமைப்பின் சேலம் பிரிவின் பொருளாளர் எஸ்.நவீன்குமார், கல்லூரி இயக்குனர்கள், முதல்வர் பி.எஸ்.எஸ்.சீனிவாசன், அறக்கட்டளையின் தலைவர் சி.பாலகிருஷ்ணன், செயலாளர் குமாரசாமி, பொருளாளர் சுரேஷ்குமார் ஆகியோர் வாழ்த்தி பேசினார்கள். இந்த போட்டியில் சென்னை எஸ்.ஆர்.எம். இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸ் அன்ட் டெக்னாலஜி மாணவர்கள் குழு ஒட்டுமொத்த செயல்திறனுக்கான முதலிடத்தை பெற்று ரூ.40 ஆயிரம் பரிசுத்தொகை வென்றது. மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லூரி மாணவர்கள் குழு இரண்டாம் இடத்தை பெற்று ரூ.25 ஆயிரம் பரிசும் மற்றும் மெட்ராஸ் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி மாணவர்கள் குழு மூன்றாம் இடத்தை பெற்று ரூ.15 ஆயிரம் பரிசும் வென்றனர். இதில் துறை தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.