பணம், கொடுக்கல் வாங்கல் தகராறில் பீகார் வாலிபர் கொலை
பணம், கொடுக்கல் வாங்கல் தகராறில் பீகார் வாலிபரை கொலை செய்த வழக்கில் தலைமறைவான குற்றவாளியை போலீசார் கைது செய்தனர்.
Update: 2024-02-14 06:33 GMT
பீகார் மாநிலம், சரஜ்கர்ஜா தாலுகா, கவாட்பூர் பகுதியை சேர்ந்தவர் ஷயாம்சாஹன் மகன் பவன்குமார், 22; பாகல்பூர் பகுதியைச் சேர்ந்தவர் பிரகாஷ்சனி மகன் அமித், 28; டைல்ஸ் பதிக்கும் தொழிலாளிகளான இருவரும், கடந்த 2022ம் ஆண்டு கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்துார்பேட்டை அடுத்த புமாம்பாக்கம் கிராமத்தில் ரமேஷ் வீட்டில் தங்கி, டைல்ஸ் பதிக்கும் வேலை செய்து வந்தனர். இந்நிலையில் அதே ஆண்டு மே மாதம் 3ம் தேதி, பவன்குமார், அமித் திடீரென காணவில்லை. சந்தேகமடைந்த ரமேஷ் தேடியபோது, பவன்குமார் கொலை செய்யப்பட்டு, செப்டிக் டேங்க் அருகே புதைக்கப்பட்டிருந்தார். இதுகுறித்து ரமேஷ் அளித்த தகவலின்பேரில் உளுந்துார்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, பவன்குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில், பணம், கொடுக்கல் வாங்கல் தகராறில் அமித், பவன்குமாரை கொலை செய்து புதைத்துவிட்டு, தலைமறைவானது தெரிய வந்தது. அதன்பேரில் சப் இன்ஸ்பெக்டர் பன்னீர்செல்வம் தலைமையிலான தனிப்படை போலீசார், தலைமறைவான அமித்தை தேடி வந்தனர். அதில் கிடைத்த தகவலின்பேரில் பீகாரில் பதுங்கியிருந்த அமித்தை, தனிப்படை போலீசார் கைது செய்து நேற்ற உளுந்துார்பேட்டைக்கு அழைத்து வந்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.