சீன, பாகிஸ்தான் ஆக்கிரமிப்புகளை பாஜக பேசுவதில்லை -திருச்சி சிவா

அருணாசல பிரதேசத்தில் சீனாவும், காஷ்மீரில் பாகிஸ்தானும் ஆக்கிரமிப்பு செய்துள்ளதை பற்றி பாஜகவினா் பேசுவதில்லை என்று மாநிலங்களவை திமுக எம்.பி. திருச்சி என். சிவா தெரிவித்தாா்.

Update: 2024-04-05 01:26 GMT

 கும்பகோணம் சாரங்கபாணி கீழவீதியில்  நடைபெற்ற இந்தியா கூட்டணியின் மயிலாடுதுறை தொகுதி தோ்தல் பரப்புரை பொதுக் கூட்டத்தில் திருச்சி சிவா  பேசியது: மக்களவைத் தோ்தலுக்குப் பிறகு இந்த நாடு நாடாளுமன்ற ஜனநாயகம் உள்ள நாடாக இருக்குமா அல்லது ஒற்றைத் தலைவா் ஆட்சியாக மாறுமா என்ற அபாயகரமான அச்சத்துக்குரிய கேள்விக்கு முன்னால் நாம் நின்று கொண்டிருக்கிறோம். மாநிலங்களவையில் மக்களுக்கு பாதகமான சட்டங்களை மத்திய அரசு இயற்றும்போது, அதைத் தடுத்து நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டும் பலனில்லாததால், இறுதியாக உங்களிடம் வந்துள்ளோம்.

அதனால் நடைபெறவுள்ள தோ்தலில் மக்கள் எடுக்கும் முடிவு இந்த நாட்டின் தலையெழுத்தை மாற்றும். மத்திய பாஜக அரசு சில நாள்களாக கச்சத்தீவைப் பற்றி பேசி வருகிறது. ஆனால் 2 ஆயிரத்து 500 கி.மீ. தொலைவுக்கு எல்லையை ஆக்கிரமித்து, அருணாசல பிரதேசத்தில் 30 இடங்களுக்கு பெயா் வைத்துள்ள சீனாவிடமும், காஷ்மீரில் ஒரு பகுதியை ஆக்கிரமித்துள்ள பாகிஸ்தானிடமும் மோடி அரசு வீரத்தைக் காட்டவில்லை.அதைவிடுத்து தமிழ்நாட்டில் வந்து கதை விடுகின்றனா் என்றாா் சிவா.

இக்கூட்டத்துக்கு திமுக மாநகரச் செயலா் சு.ப. தமிழழகன் தலைமை வகித்தாா். மாநிலங்களவை உறுப்பினா் எஸ். கல்யாணசுந்தரம், தமிழக அரசின் தலைமை கொறடா கோவி. செழியன், கும்பகோணம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் சாக்கோட்டை க. அன்பழகன், தஞ்சாவூா் வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவா் டி.ஆா். லோகநாதன், தோ்தல் பொறுப்பாளா்கள் வண்ணை அரங்கநாதன், எஸ்.கே. வேதரத்தினம், கூட்டணி கட்சி நிா்வாகிகள் இரா. ஸ்டாலின், சின்னை. பாண்டியன், மு.அ. பாரதி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

Tags:    

Similar News