மக்களை திசை திருப்ப மதத்தை பேசும் பாஜக - மனோ தங்கராஜ்
பாஜகவின் தேர்தல் அறிக்கை காய்ந்த சருகு போல உள்ளது. மதம் ஒன்றை மூலதனமாக வைத்து அரசியல் செய்யும் அமைப்புகள், ஆர்.எஸ்.எஸ்., பி.ஜே.பி. தான். முக்கிய பிரச்சனைகளில் இருந்து மக்களை திசை திருப்புவதற்காக மதத்தை பற்றி பேசுகிறார்கள் என அமைச்சர் மனோ தங்கராஜ் பேசினார்.
குமரி மாவட்டம் குளச்சல் பகுதியில் இந்தியா கூட்டணி வேட்பாளர் விஜய் வசந்த் தேர்தல் பரப்புரை செய்தார். அப்போது அமைச்சர் மனோ தங்கராஜ் கூறியதாவது:- பாரதிய ஜனதாவின் தேர்தல் அறிக்கை காய்ந்து போன சருகு போன்றது. அதில் ஓன்றுமே இல்லை. அதை காற்றில் பறக்க விடலாம். இந்தியா கூட்டணி கட்சிகள் அறிவித்துள்ள தேர்தல் அறிக்கை மக்களை கவரும் வகையில் உள்ளது.100 நாள் வேலை வாய்ப்பை 150 நாட்களாக உயர்த்தி வழங்கப்படும் என்று கூறியிருப்பது, கிராமப்புற பொருளாதாரத்தை புரட்டி போடும் அளவிற்கு உள்ளது.
குமரி மாவட்டத்தில் மதத்தை வைத்து அரசியல் செய்யப்படுவதாக, பொன் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். அவரை பார்த்து சிரிக்கவா, அழவா என்று தெரியவில்லை.அவர் தான் மதத்தை பற்றி சொல்லிக்கொண்டிருந்தார்.நாங்கள் எங்கள் பிரசாரத்தில் மதத்தைப் பற்றி பேசியுள்ளோமா? 100 சதவீதம் நாங்கள் பேசவில்லை.மதம் என்பது ஒரு மனிதனுடைய நம்பிக்கையை சார்ந்தது. அந்த நம்பிக்கை மாறுபட்டதற்கு உட்பட்டது. இன்று ஒரு நம்பிக்கையில் இருப்பான், நாளை ஒரு நம்பிக்கையில் இருப்பான். ஆனால் அந்த மதம் ஒன்றை மூலதனமாக வைத்து அரசியல் செய்யும் அமைப்புகள், ஆர்.எஸ்.எஸ்., பி.ஜே.பி. தான். இதை யாரும் மறுக்க முடியாது.
முக்கிய பிரச்சனைகளில் இருந்து மக்களை திசை திருப்புவதற்காக மதத்தை பற்றி பேசுகிறார்கள். விலைவாசி உயர்வு, பெட்ரோல், டீசல், சமையல் கியாஸ் விலை உயர்வு, வேலையில்லா திண்டாட்டம், சாமானிய மக்களை பாதிக்கக்கூடிய பிரச்சனைகள் ஆகியவை மக்களிடம் சென்று விடக்கூடாது என்பதற்காக மத உணர்வை தூண்டும் வகையில் பா.ஜ.க. நாடு முழுவதும் இதனை செய்து கொண்டிருக்கிறது. அதைத்தான் பொன் ராதாகிருஷ்ணன் முடிந்த அளவு செய்து கொண்டிருக்கிறார். இவ்வாறு அவர் பேசினார்.