வீட்டுமனை பட்டா கேட்டு பள்ளி மாணவர்களுடன் சாலை மறியல்
செங்கம் அருகே கல் உடைக்கும் தொழிலாளர்கள் வீட்டுமனை பட்டா கேட்டு, பள்ளி மாணவர்களுடன் சாலை மறியல் செய்ததால் பரபரப்பு உண்டானது.
திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அடுத்த உச்சிமலைகுப்பம், பலவக்கல், ராமாபுரம், கீழ்பாச்சல் உள்ளிட்ட கிராமங்களில் போயர் செட்டியார் இனத்தவர்கள் மற்றும் கல் உடைக்கும் செட்டியார் இனத்தவர்கள் வாழ்ந்து வருகின்றனர். இவர்களுக்கு அரசாங்கம் குடும்ப அட்டை, மின் இணைப்பு உள்ளிட்டவற்றை வழங்கி உள்ளது. 10 ஆண்டுகளுக்கு மேலாக தங்கள் குடியிருக்கும் இடத்திற்கு பட்டா வழங்க வேண்டும் என்று பலமுறை மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட பலரிடம் மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதால் ஆத்திரமடைந்த கல் உடைக்கும் செட்டியார்கள் தங்கள் பள்ளி படிக்கும் குழந்தைகள் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்டோர் உச்சிமலை குப்பம் அருகே உள்ள தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்திற்கு இடையூறாக சாலையில் அமர்ந்து தங்கள் கோரிக்கையான வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் அவர்கள் குடியிருந்து வரும் பகுதியை ஜல்லி மெஷின் வைத்திருப்பவர்கள் ஆக்கிரமித்து தங்களுக்கு பாதை கூட விடாமல் அராஜகத்தின் ஈடுபட்டு வருவதாக குற்றச்சாட்டு தெரிவித்தனர். இதனால் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
அவர்களின் கோரிக்கைக்கு உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததன் பேரில் சாலை மறியல் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்தனர். பத்தாண்டுகளுக்கு மேலாக வீட்டுமனை கேட்டு கோரிக்கை அளித்த தங்கள் மனுக்களை குப்பை தொட்டியில் வீசுவதாக கூறி எந்த நடவடிக்கையும் எடுக்காததால் ஆத்திரமடைந்த கல் உடைக்கும் இனத்தவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் அரை மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் அப்பகுதியில் பரபரப்பு காணப்பட்டது.