வண்டியூர் மாரியம்மன் தெப்பகுளத்தில் மீண்டும் படகு சவாரி

உலகப் பிரசித்தி பெற்ற மதுரை வண்டியூர் மாரியம்மன் தெப்பக்குளத்தில் மீண்டும் படகு சவாரி அனுமதிக்கப்பட்டதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Update: 2024-01-25 09:57 GMT

படகு சவாரி

மதுரையின் புகழ்பெற்ற அடையாளங்களில் ஒன்றாக திகழ்வது மதுரை வண்டியூர் மாரியம்மன் தெப்பக்குளம். திருமலை நாயக்கர் மஹால் கட்டுப்பட்டுவதற்காக தோண்டப்பட்ட இடத்தில் இந்த தெப்பக்குளம் உருவாக்கப்பட்டது, அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள மாரியம்மன் தெப்பக்குளம் மிகவும் புகழ்பெற்ற ஆன்மீகம் மற்றும் சுற்றுலா தலமாக விளங்கி வருகிறது. மதுரை வண்டியூர் மாரியம்மன் தெப்பக்குளத்தை உள்ளூர் மக்கள் மட்டுமின்றி வெளியூர் மற்றும் வெளிநாட்டைச் சேர்ந்த ஏராளமானோர் பார்வையிட்டு செல்கின்றனர்.

கடந்த மூன்று வருடங்களுக்கு மேலாக முழுமையாக தண்ணீர் நிரம்பி அழகாக காட்சியளிக்கும் தெப்பக்குளத்தில் ஒரு ஆண்டுகளுக்கு முன்பாக படகு சவாரியும் துவங்கப்பட்டது. இது மக்களிடையே பெரும் வரவேற்பையும் பெற்றது. இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்பாக தெப்பக்குளத்தில் தண்ணீர் வற்ற தொடங்கியதால் படகு சவாரி ஆனது நிறுத்தப்பட்டது. இந்நிலையில், நாளை மறுநாள் தை தெப்பத் திருவிழா வெகு விமர்சையாக தேரோட்டத்துடன் தெப்பக்குளத்தில் கொண்டாடப்பட இருக்கிறது.

இதை காண பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கூடுவார்கள். திருவிழாவிற்காக தெப்பக்குளத்தில் தண்ணீர் தற்போது நிரப்பப்பட்டுள்ளதால் தெப்பக்குளம் முழு கொள்ளளவை எட்டி கடல் போல் காட்சி அளித்து வருகிறது. மேலும் நிறுத்தப்பட்டிருந்த படகு சவாரியம் இன்று முதல் துவங்கப்பட்டுள்ளது. மதுரை காமராஜர் சாலையில் உள்ள நிப்பான் பர்னிச்சர் சார்பில் தெப்பக்குளத்திற்கு இரண்டு புதிய படகுகள் வாங்கித் தரப்பட்டுள்ளது.

அந்தப் படகுகளுக்கு பூஜை செய்யப்பட்டு மக்களுக்கு இனிப்பு வழங்கிமீண்டும் தெப்பக்குளத்தில் படகு சவாரியானது துவங்கப்பட்டுள்ளது. முதலில் ஒரு படகு மட்டுமே விடப்பட்ட நிலையில் தற்போது இரண்டு படகுகள் தெப்பக்குளத்தில் விடப்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகளும் பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags:    

Similar News